ஒவ்வொருவருக்கும் பல பிறவிகள் உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட கதை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவா எனும் அரசனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இப்போதும் நடக்கிறது. அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் படம்.
1070 ஆம் ஆண்டில் பெருமாச்சி எனும் நிலப்பரப்பின் தலைவராக இருக்கும் கங்குவா, ஒரு சிறுவனின் உயிரைக் காக்க சபதமேற்கிறார். அதில் தோற்கிறார்.அதனால் பிறவிகள் கடந்தாலும் உன்னைக் காப்பேன் என அறைகூவல் விடுக்கிறார். அதன்படி 2024 இல் அச்சிறுவனைச் சந்திக்கிறார். இப்போதும் அவன் உயிருக்கு ஆபத்து. இவர் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் முடிவு.
கங்குவா எனும் கதாபாத்திரத்திற்காக மிகக் கடுமையாகத் தயாராகியிருக்கிறார் சூர்யா.எதிரிகளிடம் வீரம் மக்களிடம் அன்பு படையினரிடம் தலைமைப் பண்பு ஆகிய பல்வேறு உணர்வுநிலைகளிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.சண்டைக்காட்சிகளில் அபரிமிதமான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் திஷா பதானிக்கு கொஞ்சமே கொஞ்சமான வாய்ப்பு. அதில் கவர்ச்சிகரமாகத் தோன்றி தன் இருப்பைத் தக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் இந்தி நடிகர் பாபிதியோல், அதற்கேற்ற உருட்டல் மிரட்டல்களைக் காட்டியிருக்கிறார்.
வரலாற்றுக் காலகட்டத்தில் வருகிற கருணாஸ், நட்டி, போஸ்வெங்கட் உள்ளிட்ட ஏராளமானோரில் கருணாஸின் செயல் சிலிர்க்க வைக்கிறது.
தற்காலகட்டத்தில் வரும் கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.
கடைசியில் வரும் நடிகர் கார்த்தி, தன் வேடத்தை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார்.
கலை இயக்குநர் மிலன், சண்டைப் பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் ஆகியோர் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.தனியொருவராக 500 படைவீரர்களை சூர்யா எதிர்கொள்ளும் சண்டைக் காட்சி மிக நன்று.
தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாழ்வில்லை. பின்னணி இசை கொஞ்சம் மிகை.
வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு மிகச் சிறந்த காட்சியனுபவத்தைக் கொடுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் சிவா.பிறவிகள் கடந்தும் தொடரும் பந்தம் எனும் மையத்தை வைத்து கதை எழுதி அதற்கு சிறந்த காட்சிகளைக் கொண்ட திரைக்கதை அமைத்திருக்கிறார்.25 பெண்கள் 15 படைவீரர்களைக் கொல்லும் காட்சிகள் உட்பட பல காட்சிகள் பெருமைக்குரிதாக அமைந்திருக்கின்றன.
வெளியிலிருந்து வரும் ரோமானிய அரசனுக்காக தமிழ் மன்னர்கள் சகோதர யுத்தம் நடத்துகிறார்கள், தமிழ் மக்கள் கூட்டத்தில் பணத்துக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும் பல இரண்டகர்கள் இருக்கிறார்கள், போர் முனையில் மன்னிப்பு ஆகியன வசனங்களில் சொல்லப்படும் பல உயரிய கருத்துகளுக்கு நேர் எதிராக அமைந்திருப்பது பெரும் பலவீனம்.
சூரயாவின் நடிப்பு வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு ஆகியன படத்தைக் காத்து நிற்கின்றன.
– செல்வன்