தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம்.
பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள் வாத்தியார் உருவான கதையும் பெருமாள் வாத்தியாருக்கு என்ன நடக்கிறது? என்பதும் அரசாங்க அதிகாரிகள் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இணைந்த அதிகார வர்க்கத்துக்குள் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பனவற்றையெல்லாம் பேசியிருக்கிறது படம்.
பள்ளி ஆசிரியராக அறிமுகமாகும் காட்சியிலிருந்து மக்களுக்கான அரசியல் தலைவராக உருப்பெறும் காட்சிகள்,அதன்பின் ஆயுதப்போராட்டமே சரி என முடிவெடுப்பது அதற்கும் அடுத்து மக்கள்மயப் போராட்டங்களே நிரந்தரத் தீர்வுக்கு வழி என உயிராபத்து பின் தொடரும் நேரத்திலும் அரசியல் வகுப்பெடுப்பது என எல்லாக்காட்சிகளிலும் தேர்ந்த தோழராக மிளிர்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி.இவற்றிற்கிடையில் மஞ்சுவாரியரிடம் பேசும் காதல்மொழிகளிலும் கைதட்டல் பெறுகிறார்.
ஆழமான அர்த்தமுள்ள வசனங்களை இயக்குநர் குழு எழுதியிருக்கலாம்.அவற்றைத் தெளிவாக, மக்களுக்குப் புரியும் வகையில் மிக இயல்பாக எடுத்துரைத்து அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி.
தோழருக்கேற்ற தோழியாக வருகிறார் மஞ்சுவாரியர்.பெற்ற அப்பா மற்றும் சகோதரனையே கொல்லச் சொல்லும் புரட்சிப் பெண் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.நான் ஏன் இப்படி என் சுகத்தை இழக்கவேண்டும்? எல்லோரும் சந்தோசமாக இருக்க நீங்கள் ஏன் உங்களை அழித்துக் கொள்ள வேண்டும்? என்கிற வசனங்களில் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை மாறுகிறது.பொதுவாழ்க்கைக்கு வருவோரின் சிந்தையைக் குழப்பும் செயல்.
பொதுவுடைமைத் தலைவராக நடித்திருக்கும் கிஷோர்,நடிக்கவில்லை.வாழ்ந்திருக்கிறார்.இப்படம் பார்த்தோர் இனி சிவப்புத்துண்டு அணிந்திருப்பவரை மரியாதையாகப் பார்ப்பார்கள் என்பது நிச்சயம்.
காவல்துறை ஏவலராக வரும் சூரி,இம்முறை கொஞ்சம் யோசிக்கிற வேடமேற்றிருக்கிறார்.அவருடைய பார்வையில் மொத்தத் திரைக்கதையும் விரிகிறது.அதனால் கட்டக் கடைசியில் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் கவுதம் வாசுதேவ்,சேத்தன்,தமிழ் உள்ளிட்டோர் அத்துறையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.அவர்களும் சிறப்பாக நடித்து அவ்வேடங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
உயரதிகாரியாக நடித்திருக்கும் ராஜீவ்மேனனும் அவர் உடன் இருக்கும் சரவணசுப்பையாவும் அப்பட்டமான, அநியாயமான, நேர்மை துளியுமற்ற அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.நம்ம பசங்களை இந்தி படிக்க வைக்க வேண்டுமெனச் சொல்வதுபோல் காட்சி வைத்திருப்பதன் மூலம் பல செய்திகளை உணர்த்தியிருக்கிறார்கள்.
கென்கருணாஸ் மற்றும் அவருடைய தோழர்கள்,பாவெல்,பாலாஜிசக்திவேல் உள்ளிட்ட அனைவருமே அருமை.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்,சில காட்சிகளை மட்டும் பரந்துபட்டுக் காட்டிவிட்டு மற்ற எல்லாக் காட்சிகளையும் மிகநெருக்கமாகக் காட்சிப்படுத்தி செல்வை மிச்சப்படுத்தியிருக்கிறார்.கறுப்பும் சிவப்பும் வந்து நாட்டைக் கெடுத்துவிட்டன என்று நடிகராக அவர் பேசும் வசனமும் கவனிக்கத்தக்கது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுகம்.பின்னணி இசையில் வேகமும் விறுவிறுப்பும் நிரம்பித் ததும்புகிறது.
மூலக்கதை தங்கம் எழுதிய வேங்கைச்சாமி மற்றும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கம் வளர்ந்த வகை மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை உருவாக்கம் மற்றும் செயல்கள் ஆகியனவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார்.அறமற்ற அரச பயங்கரவாதத்தால் ஓர் ஆளுமை சுட்டுக்கொல்லப்பட்டதோடு படம் நிறைவடைகிறது.ஆனால் அதற்குப் பின்னும் காட்சிகளை நீட்டித்து அதே அரச பயங்கரவாதக் கூட்டத்தில் ஒருவர் திருந்தியதுபோல் காட்டியிருப்பது இயக்குநரின் கொள்கைத் தடுமாற்றம்.
சொல்லாமல் விட்டது அல்லது சொல்லத்தெரியாமல் விட்டது ஆகியனவற்றைத் தாண்டி சொல்லியிருக்கும் விசயங்கள் வரலாற்றுப்பாடங்கள் என்பது நிறைவு.
– அரம்பன்