எதிர்மறை எண்ணங்கள் தான் சரி,நேர்மையாக வாழ்வதெல்லாம் இப்போது ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், வறுமையிலும் நேர்மையுடன் வாழும் ஒருவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரு.மாணிக்கம்.
கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் பரிசுச்சீட்டுக் கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு வறுமையில் வாடுகிறார். அவரிடம் பரிசுச் சீட்டு வாங்கும் பாரதிராஜாவுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது.ஆனால் அவர், பணம் தொலைந்துவிட்டதால் வாங்கிய சீட்டுகளை பணம் கொடுத்துவிட்டுப் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றிருப்பார்.
அவர் யார்? எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விவரமும் தெரியாது.
அந்தப் பரிசை சமுத்திரக்கனியே எடுத்துக் கொண்டாலும் கேட்பதற்கு ஆளில்லை. இந்நிலையிலும் பாரதிராஜாவைக் கண்டுபிடித்து அப்பரிசை அவரிடம் கொடுக்க முனைகிறார் சமுத்திரக்கனி.இதற்குக் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.வேறு சில ஆபத்துகளும் வருகிறது.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதுதான் படம்.
நேர்மையின் சின்னமாக இருக்கும் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் சமுத்திரக்கனி.அந்தக் கதாபாத்திரத்தின் நேர்மை ஒவ்வொரு காட்சி மற்றும் வசனங்களில் வெளிப்பட்டு வரவேற்புப் பெறுகிறது.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் அனன்யா சிறப்பு.வறுமை மிகுந்த குடும்பத் தலைவி வேடத்துக்குக் கனகச்சிதமாக இருக்கிறார். கோபம் கொந்தளிப்பு ஆற்றாமை உள்ளிட்ட பல உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாரதிராஜாவின் வேடம் சிறிது கீர்த்தி பெரிது.நாசர்,இளவரசு,வடிவுக்கரசி,சின்னி ஜெயந்த்,சாம்ஸ்,ஸ்ரீமன் உள்ளிட்டோரின் அனுபவ நடிப்பு படத்துக்கு உதவியிருக்கிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் நன்று,பின்னணி இசை அளவு.
எம்.சுகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் குணாவின் உழைப்பால் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் பதட்டத்துடனும் நகர்கிறது.
பணம்,பொருள்,ஆடம்பர வாழ்க்கை ஆகிய எதிலும் எளிதில் கிடைத்துவிடாத மனநிம்மதி நேர்மையான வாழ்க்கையில் நிறைவாகக் கிடைக்கும் என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.இந்தச் சிந்தனைக்காகவே அவரையும் படக்குழுவினரையும் மனதாரப் பாராட்டலாம்.
– இளையவன்