வெகுமக்கள் கவனத்தில் வராத மாந்தர்களைப் பற்றிய கவன ஈர்ப்பு பாலாவின் படங்களில் இருக்கும்.வணங்கான் படம் மாற்றுத்திறனாளிகளின் வலியைப் பேசுகிற படமாக வந்திருக்கிறது.
கன்னியாகுமரியில் வசிக்கும் நாயகன் அருண்விஜய், காதுகேட்காத வாய்பேச முடியாதவர்.கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு தங்கை ரிதாவுடன் வசித்து வருகிறார்.மாற்றுத்திறனாளிகள் விடுதியின் பாதுகாவலர் பணிக்குச் செல்கிறார்.ஒருசமயம் அங்கு நடக்கும் தப்புக்கு எதிராகப் பொங்கி எழுகிறார்.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதையெல்லாம் விளக்குகிறது படம்.
காதுகேட்காத வாய்பேச முடியாத கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் அருண்விஜய் அதற்கு நூறுவிழுக்காடு நியாயம் செய்திருக்கிறார்.இதுவரை பார்த்திராத வகையில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வருகிறார்.தங்கையிடமும் மாற்றுத்திறனாளிகளிடமும் கனிவு காட்டும் அவர் கொடுமை கண்டு பொங்கியெழும்போது வியக்க வைத்திருக்கிறார்.காவல்துறை விசாரணையின் போது அவர் காட்டும் வேகம் அசாத்தியமானது.
நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷ், கன்னியாகுமரிக்கென பிரத்யேக வேலையான சுற்றுலா வழிகாட்டி வேடத்தில் நடித்திருக்கிறார்.பல மொழிகள் பேசுவதோடு எந்த நாட்டுக்காரர்கள் வருகிறார்களோ அந்த நாட்டின் உடையணிந்து வழிகாட்டிகளுக்கு புதுவழிகாட்டியிருக்கிறார்.கலகலப்பான பேச்சு, காதல்பார்வை, கலக்கம் ஆகிய உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா,படம் நெடுக கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும் பரிதாப கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.ஏன் இப்படிச் செஞ்சே? என்று அண்ணனிடம் கதறும்போதும் கடைசிக் காட்சியிலும் நம்மையும் கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் மிஷ்கின்,காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்பு.நீதிபதிகள் எப்படி நீதி வழங்கவேண்டும்? காவல்துறை அதிகாரிகள் எப்படி விசாரணை நடத்த வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும் வேடங்களில் நன்றாக நடித்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் இதம்.இறுதியில் வரும் பாடல் கனம்.சாம்.சி.எஸ் பின்னணி இசையில் காட்சிகளுக்குப் பலம்.
ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவில் கன்னியாகுமரியைச் சுற்றிப் பார்த்துவிட முடிகிறது.அதோடு கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பெருக்கையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இடைவேளைக் காட்சியே பெரும் அதிர்வை ஏற்படுத்தக் கூடியது,பின்பு அதற்கும் மேலே அடுத்த தண்டனையைக் கொடுக்கிறார் பாலா.இந்தக் குற்றத்துக்கு இவ்வளவு பெரிய மற்றும் கொடூர தண்டனையா? என்கிற கேள்வி எழக்கூடும்.அதற்கான விடையை மாற்றுத்திறனாளிகள் மூலமே சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலா.
வணங்கான் -குற்றத்துக்கு இணங்கான் அறத்தில் உயர்ந்தான்.
பாலா தனது படங்களில் தொடர்ந்து வில்லன்களுக்கு படு வித்தியாசமாக, கொடூரமாக தண்டனை கொடுப்பதை மட்டுமே ஹைலைட் செய்வதை தவிர்த்துவிட்டு , நல்ல கதைகளைத் தேடி, அந்தக் கதைகளின் கருத்தை சிதைக்காமல் அதை திரையில் வடிப்பதைச் செய்தால் மட்டுமே அவர் சிறந்த இயக்குனர் என்கிற இடத்தை மீண்டும் அடைய முடியும். அப்படி ஒரு அழகிய கதையை எடுத்து அதைத் திரையில் அதைவிட அழகாக செதுக்க முடிபவனே சிறந்த இயக்குனராகிறான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
மகேந்திரன், பாலுமகேந்திரா, தற்போதைய வெற்றிமாறன் போன்றோரின் செயல்பாடுகள் அவர்கள் கதைகளின் வீச்சிற்குள் நின்று அந்தக் கதைகளுக்கு திரையில் நியாயம் செய்வதே அவர்களின் வெற்றிக்கு காரணம் என்பதை பாலா உணர்வாரா
– அன்பன்