தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கு வாழ வந்திருப்போரை அவர்களது சொந்த ஊரில் மெட்ராஸ்காரன் என்று அழைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒருவரைக் கதைநாயகனாகக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்கு அந்தப்பெயர்.
சென்னையில் வசிக்கும் நாயகன் ஷேன் நிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் தனது திருமணத்தை நடத்த விரும்புகிறார். அதற்கான வேலைகள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கும் போது,நாயகனின் வாழ்வில் திடீர் சிக்கல்.அதனால் என்னென்னவெல்லாம் நடக்கின்றன? அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார்? என்பனவற்றை வேகமும் விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கிறது இந்தப்படம்.
மலையாளத்தில் புகழ்பெற்ற நாயகனாக இருக்கும் ஷேன்நிகம் தமிழ்நாட்டுக்குப் புதியவர்.அவருடைய வசன உச்சரிப்புகள் அவர் யார்? என்பதைச் சொல்லிவிடுகிறது.இப்படத்தில் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் மிகப் பொறுப்புடன் நடித்திருக்கிறார்.பாசக் காட்சிகள், காதல் காட்சிகள்,சண்டைக் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் நிறைவாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிகாரிகா வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அவ்வேடம்தான் திரைக்கதையோட்டத்தின் மையமாக இருக்கிறது.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
கலையரசனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதைத் தன் நடிப்பின் மூலம் மேலும் மெருகேற்றியிருக்கிறார்.அவர் நல்லதின் பக்கம் நிற்கிறாரா?கெட்டதின் பக்கம் நிற்கிறாரா? என்கிற குழப்பம் வருவது அப்பாத்திரத்தின் பலம்.
ஐஸ்வர்யாதத்தா, கலையரசனின் மனைவியாக நடித்து கதையிலும் முக்கியத்துவம் பெற்று நன்றாகவும் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
கருணாஸ், பாண்டியராஜன், கீதா கைலாசம், தீபா, லல்லு ஆகிய அனைவரும் ஏற்றிருக்கும் வேடத்துக்கு ஏற்ப அளவாக நடித்திருக்கிறார்கள்.அவர்களுடைய அனுபவம் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.மற்ற உணர்வுகளையும் காட்சிகளில் கடத்தியிருக்கிறார்.
சாம்.சி.எஸ் இசையில் திருமணப் பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் நன்று.பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.
ஆர்.வசந்தகுமாரின் படத்தொகுப்பு படம் தொய்வின்றி நகர உதவி செய்திருக்கிறது.
வாலிமோகன்தாஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.திரைக்கலை காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு மனிதரையும் இயக்கும் சக்தியை மையமாகக் கொண்டு அதில் சிக்கல் எனில் வெகுண்டெழுவார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்ல வந்திருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
– இளையவன்