கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்,கணவனே கண் கண்ட தெய்வம் என்பன உட்பட கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழவேண்டும் என்கிற கருத்தியலையும், காதல் போயின் சாதல், காதல் புனிதமானது என்கிற கருத்தையும் ஒருசேர உடைத்து நொறுக்கும் வண்ணம் வந்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை.
காதலியைப் பிரிந்த நாயகன் ரவிமோகன்,கணவனைப் பிரிந்த நாயகி நித்யாமேனன் ஆகியோர் சந்திக்க நேர்கிறது.ஒருவருக்கொருவர் ஈர்ப்பும் ஏற்படுகிறது.அவர்களறியாமல் அவர்களுக்குள் ஏற்கெனவே ஒரு பிணைப்பும் இருக்கிறது.அது என்ன? அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.
ரவிமோகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுமையான காதல் நாயகனாக வலம்வருகிறார்.டி.ஜே.பானு,நித்யா மேனன் ஆகிய இருவருடனான காட்சிகளிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.சிறுவனுடான காட்சிகள் சுவை.
நித்யாமேனன் கதாபாத்திர வடிவமைப்பு உணர்வுப் பூர்வமானது.அதை நன்றாக உள்வாங்கி நடித்து வரவேற்புப் பெறுகிறார்.சட்டென கணவனைப் பிரியும் முடிவெடுப்பது,அதேபோலவே சட்டென குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து அதைச் செயல்படுத்துவது ஆகிய எல்லா இடங்களிலும் தன் இருப்பை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்.
காதலியாக நடித்திருக்கும் டி.ஜே.பானு,நகைச்சுவைக்காக இருக்கும் யோகிபாபு,புதிதான கதாபாத்திரத்தை துணிவாக ஏற்று நடித்திருக்கும் வினய்,மலையாள நடிகர் லால்,மனோ,லட்சுமி ராமகிருஷ்ணன்,வினோதினி ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாகச் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
கேவ்மிக் யு ஆரியின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் இளமை துள்ளுகிறது.சில காட்சிகளின் ஒளியமைப்பு வியக்கவும் இரசிக்கவும் வைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசை திரைக்கதை உணர்வோடு இசைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.தமிழ்த் திரையுலகில் இதுவரை பேசத் துணியாத தன்பாலின மணம், விந்து தானம் ஆகியனவற்றைப் பேசியிருக்கிறார்.அவற்றிற்கேற்ற திரைக்கதையை அமைத்திருக்கிறார்.கதைக்கருவில் புதுமை,காட்சிகளில் இனிமை,மேல்தட்டுவர்க்க வாழ்க்கை முறை ஆகியன அவருக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.
காதலிக்க நேரமில்லை என்று எதிர்மறையான சொல்லை வைத்துக் கொண்டு எதிர்கால வாழ்வை நேர்மறையாக அணுகியிருப்பதும் அதைத் திரைமொழியில் சரியாக வெளிப்படுத்த முனைந்திருப்பதும் கிருத்திகா உதயநிதியின் பலம்.
– குமரன்