019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் என்கிற மலையாளப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த எம்புரான்.அந்தப் படத்தில் அரசியல்கட்சித் தலைவரும் மாநிலத்தின் முதலமைச்சருமான ஒருவரின் மறைவுக்குப் பிறகு ஏற்படும் அரசியல் குழப்பங்களும் அதனூடே மறைந்த தலைவரின் மகனையே முதலமைச்சர் ஆக்குவதுதான் கதை.
அதன் தொடர்ச்சியாகவே இந்தப்படம் வெளியாகியிருக்கிறது.
அந்தப்படத்தில் முதலமைச்சர் ஆன டோவினோ தாமஸ், அரசியல் ரீதியாக தப்பான முடிவுகளை எடுக்கிறார்.அதனால் மீண்டும் கேரளா வரும் மோகன்லால் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் இந்தப்படத்தின் திரைக்கதை.
மோகன்லால் அளவாக நடித்திருக்கிறார், சரியாக நடித்திருக்கிறார் என்பதோடு மிகவும் ஸ்டைலாக இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
இந்தப்படத்தின் இயக்குநராகவும் இருக்கும் பிரித்விராஜுக்கு முதல்பாகத்தை விட இதில் கூடுதல் திரை இருப்பு.அதையும் ஏனோதானோவென இல்லாமல் அழுத்தமான கதாபாத்திரம்.நிறைவாகச் செய்திருக்கிறார்.
மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் ஆகிய அனைவருமே நல்ல நடிகர்கள்.அனைவரையும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருடைய உழைப்பில் இப்படம் ஓர் ஆங்கிலப்படம் போல் தெரிகிறது.காட்சிகளில் வியப்பும் பிரமாண்டமும் நிறைந்திருக்கின்றன.
படத்தின் காட்சிகளில் மிகவும் லயித்துவிட்டார் இசையமைப்பாளர் தீபக் தேவ்.பல காட்சிகளில் கொஞ்சம் கூடுதலாகவே பின்னணி இசைத்துள்ளார்.
படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், இன்னும் கூடுதல் கவனத்துடன் தொகுத்திருக்க வேண்டும்.
முதல்பாகம் முழுக்க கேரளாவில் மட்டும் நடக்கும்.இந்தபாகத்தில் இந்திய ஒன்றியம் மட்டுமின்றி உலகம் முழுக்க கதை பயணித்திருக்கிறது.
2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம்,போதைக் கடத்தல்,இந்திய ஒன்றியக் கட்சி, இப்போது ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டங்கள் மத அரசியல் ஆகியன குறித்தான காட்சிகள் வசனங்கள் மற்றும் குறியீடுகள் காரணமாகப் பெரிதும் கவனம் ஈர்த்திருக்கிறது.
அவற்றைக் குழப்பமில்லாமல் இரசிகர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன்.
– இளையவன்