பல ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் சுமோ.இந்தப்படத்தின் கதை, அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டு வீரரான சிவா, அலைச் சறுக்கு விளையாட கடலுக்குச் செல்லும் போது அங்கே ஒருவர் கரை ஒதுங்கிக் கிடக்கிறார். அவரை சிவா காப்பாற்றுகிறார்.
கரை ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அந்நாட்டில் அவர் மிகப்பெரிய சுமோ மல்யுத்த வீரர் என்பதும் சிவாவுக்குத் தெரிய வருகிறது.
அதனால் அவரை ஜப்பானுக்கு அனுப்பும் முயற்சியில் சிவா ஈடுபடுகிறார். ஆனால் அந்த வீரர் மீண்டும் ஜப்பானுக்கு வருவதை விரும்பாத ஒரு கும்பல் அவரை அங்கு வரவிடாமல் தடுக்க முயல்கிறது.
அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கும் கும்பல் எது? எதற்காகத் தடுக்கிறார்கள்? அவர்களது எதிர்ப்பை முறியடித்து, சுமோ வீரரை ஜப்பானுக்கு சிவா அழைத்துச் சென்றாரா? என்பதுதான் கதை.
இந்தப்படத்தில் மிகவும் இளமையாகத் தெரிகிறார் நாயகன் சிவா.அவரது இயல்புக்கேற்ற வேடம் என்பதால் எளிதாகச் செய்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியாஆனந்த்துக்குக் குறைவான வாய்ப்புதான் என்றாலும் அளவாக நடித்திருக்கிறார்.
சுமோவாக நடித்திருக்கும் யோஷினோரி தாஷிரோ கவர்கிறார்.
யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ், நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி என நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.அவருடைய இசையில் பிள்ளையார் பாடல் நன்று.மற்றவை சுமார். பின்னணி இசையில் குறைவில்லை.
ராஜீவ்மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.சில காட்சிகள் சிறப்பு, பல காட்சிகள் நெருடல்.
பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்கவேண்டும்.
நாயகனாக நடித்திருக்கும் சிவாவே படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார்.அதனால் பல பற்றாக்குறைகள்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஹோசிமின்.ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறியிருக்கிறது.
– இளையவன்