மணிவண்ணன் தமிழ் சினிமாவில் சுமார் 400க்கு மேற்பட்ட படங்கள் நடித்து சுமார் 50க்கு மேற்பட்ட படங்கள் இயக்கிய இயக்குனர். 15ம் தேதி இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் பலனின்றி அமைதியாய் இறந்து போனார்.
கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்கள் போட்டு நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்த மணிவண்ணன் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தைப் பார்த்து ஒரு நூறுபக்கங்கள் கொண்ட ரசிகர் கடிதத்தை பாரதிராஜாவுக்கு எழுதினார். அதைப் படித்து விட்டு பாரதிராஜா அவரை அழைத்து தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக்டிக்டிக், அலைகள் ஓய்வதில்லை மற்றும் காதல் ஓவியம் ஆகிய படங்களின் கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.
மணிவண்ணன் இயக்கிய 50 படங்களில் நூறாவது நாள், இங்கேயும் ஒரு கங்கை, இளமைக் காலங்கள், இருபத்தி நான்கு மணிநேரம், சின்னத்தம்பி பெரியதம்பி, அமைதிப்படை போன்ற வெற்றிப் படங்கள் இவருடைய இயக்கத்தில் வந்தவைதான்.
பெரியாரின் கொள்கைகள் மேல் பற்றுகொண்டவர். திராவிட இயக்கங்களை ஆதரித்தவர். தமிழீழ விடுதலை மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர். பிரபாகரன் மேல் பற்று கொண்டவர். 90களில் மிகவும் நொடித்துப் போய் கடைசியாக தனது மிஞ்சிய சொத்துக்களனைத்தையும் வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றால் மேலே.. இல்லாவிட்டால் திரும்ப சொந்த ஊருக்கே போய்விட வேண்டியதுதான் என்கிற நெருக்கடியான சூழலில் எடுத்த படம் தான் அமைதிப்படை. அவரது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுத்ததும் அந்தப் படம் தான். ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படை ஈழத்தில் நம் சொந்த தமிழ் மக்களையே கொன்றதை குறிக்கும் விதமாகவே படத்திற்கு அமைதிப் படை என்று தலைப்பிட்டார்.
அதன் பிறகு முழுக்க முழுக்க நடிகராகிவிட்ட மணிவண்ணன் மிகச் சமீபத்தில் தான் அமைதிப் படை பாகம் இரண்டை எடுத்து வெளியிட்டார். நாகராஜசோழன் என்கிற பெயரில் வெளிவந்த இநதப் படம் தோல்விப் படமே. இவருக்கும் சத்யராஜூக்குமிடையேயான நட்பு திரையைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் நீண்டதொரு நட்பாகும்.
கோயம்புத்தூர்காரரான மணிவண்ணன் பெரும்பாலும் படங்களில் கோயமுத்தூர் பாஷையில் பேசியே நடிப்பார். எல்லோரும் அவரை கோயம்புத்தூர் கவுண்டர் என்று நினைக்குமளவு இருக்கும் அவரது பேச்சு. ஆனாலும் எப்போதும் அவர் தனது ஜாதியை வெளிக்காட்ட விரும்பியதில்லை. இன்று வடபழனியில் அவரது மறைவையொட்டி ஒரு ஜாதிக் கட்சியின் இரங்கல் போஸ்டரைக் காண நேர்ந்தது. வாழ்நாள் முழுதும் ஒருபோதும் அவரை இணங்கண்டு அவருடன் தன்னை அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் தான் இந்த ஜாதிக்கட்சிக்காரர்கள்.
மணிவண்ணன் மட்டும் இந்தப் போஸ்டரைப் பார்த்திருந்தால் ‘ஏங்கிட்ட உதைபட்டே சாகப் போறே நீ..’ என்று கோயம்புத்தூர் பாஷையில் எச்சரித்திருப்பார் அந்த ஜாதிக் கட்சிக்காரனை. ஈழத்து புலிக்கொடி போர்த்திய உடலோடு அமைதியாய் பயணப்பட்டுவிட்டார். சென்று வாருங்கள் மணிசார்.