திரைப்படம் பார்க்கச் செல்கிறவர்கள் அந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறிப்போகிறார்கள்.அதனால் அவர்களுக்குப் பல சிக்கல்கள்.அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்கிற கேள்விக்கான விடைதான் டிடி நெக்ஸ்ட் லெவல்.

வலையொளியில் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானமும் அவரது குடுமபமும் திரைப்படத்துக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.அவர்கள் ஏன் சிக்கினார்கள்? கடைசியில் என்னவானது? என்பதை சிரிப்பும் குழ்ப்பமுமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தோற்றம் மற்றும் நடை உடை பாவனைகளில் மாற்றம் காட்ட முயன்றிருக்கிறார் சந்தானம்.அவருடைய வசன உச்சரிப்பு முறை அவருக்கு இந்தப்படத்திலும் பலமாக அமைந்திருக்கிறது.குறிப்பாக ப்ரோ என்று அவர் அழைப்பதைச் சொல்லலாம்.

நாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரிக்குக் காதல் காட்சிகள் மட்டுமின்றி பேயாக வந்து மிரட்டும் காட்சிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.அழகான பேய்.

நான் கடவுள் ராஜேந்திரன்,மாறன்,ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.அவர்களோடு செல்வராகவன்,கெளதம்மேனன்,நிழல்கள் ரவி ஆகியோரும் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.சந்தானத்துக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் கஸ்தூரி. அவரும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் அளவாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

தீபக்குமார்பதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.காட்சிகள் திகில் படங்களில் காணமுடியாதவை. வண்ணமயமாகவும் அதேசமயம் பயமுறுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

இசையமைப்பாளர் ஆப்ரோவின் இசையில் மெல்ல சாவ் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.திகில் படங்களுக்கேயுரிய பின்னணி இசையிலும் மாற்றம் செய்யவேண்டுமென அவர் முயன்றிருக்கிறார்.அது பலனளிக்கவில்லை.

கொஞ்சம் பிசகினாலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடிய திரைக்கதையை மக்களுக்குப் புரியும்படி தொகுத்துக் கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

எழுதி இயக்கியிருக்கிறார் பிரேம் ஆனந்த். திரைப்பட விமர்சகர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதனால் இந்தத் திரைக் கதையை எழுதியிருப்பார் போலும்.எடுத்துக் கொண்ட விசயத்தை சுவாரசியமாகச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார்.பார்க்கிறவர்கள் கிண்டல் செய்வதற்கு முன்பாக தங்களைத் தாங்களே கேலி செய்து கொள்ளும் உத்தியில்,இயக்குநர் செல்வராகவன் பேசும், முடிந்தால் இந்தப் படத்திலிருந்து எப்படியாவது தப்பித்து ஓடிவிடு என்பது உள்ளிட்ட பல வசனங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒரு படம் நல்ல படமாக இருந்தால் யார் எப்படி விமர்சனம் செய்தாலும் நன்றாக ஓடும் என்கிற கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.