1973ல் ஹாலிவுட்டில் வெளியிடப்பட்டு உலகெங்கும் இந்தியா உட்பட எந்த டப்பிங்கும் செய்யப்படாமலே நூறு நாட்களைத் தாண்டி உலகெங்கும் ஓடிய படம் புரூஸ்லீ நடித்த ‘என்டர் தி ட்ராகன்'(Enter The Dragon). கராத்தே சண்டைகள் நிறைந்த இந்தப் படம் புரூஸ்லீக்கு உலகெங்கும் அழியாப் புகழையும் ரசிகர்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்தப் படத்தில் புரூஸ்லீயுடன் அவரது நண்பராக வரும் மூவரில் ஒருவர் தான் ஜிம்கலி. அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பரான இவர் ஆப்பிரிக்கர் போன்று அடர்த்தியான சுருள் முடி கொண்டவர். அது அவருக்கு இரண்டாவது படமாகும்.
புரூஸ்லீயுடன் பணியாற்றியது பற்றி அவர் கூறும் போது தான் வேலை செய்த படங்களிலேயே என்டர் தி ட்ராகன் தான் மறக்க முடியாத படமாகும் என்றார். புரூஸ்லீயும் இவரும் கராத்தே கலையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்களாதலால் அவருடன் இணைந்து சண்டைப் பயிற்சிகள் காட்சிகள் செய்தது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது என்றார்.
மறக்கமுடியாத நடிகரான ஜிம்கலி கடந்த சனிக்கிழமை கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 67.