2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 96. விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த அப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார்.மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

அப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.விஜய்சேதுபதி தனிக் கதாநாயகனாக நடித்து பெரிய வெற்றி பெற்ற படம் இது என்கிற அடையாளத்தையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த படம்.

அப்படம் வெளியாகி ஏழாண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியிருந்தார்கள்.

அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார், அதற்குப் பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மெய்யழகன் அண்மையில் வெளியானது.உணர்வுப்பூர்வமாக உறவுகளை நேசிக்கும் கதை கொண்ட அப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து,அவருடைய பெரும் பலமான 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதியிருக்கிறார் பிரேம்குமார்.அதை விஜய்சேதுபதி த்ரிஷா ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார்.

அவர்களுக்கும் கதை பிடித்துவிட்டதாம்.அதனால் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.முதல் பாகத்தில் நாயகி த்ரிஷா மனம் நிறைய காதலைச் சுமந்து கொண்டு சிங்கப்பூர் கிளம்பிப் போயிருப்பார்.

அதனால் அங்கிருந்தே இரண்டாம் பாகம் தொடங்கவிருக்கிறதாம்.ஆம்,இரண்டாம் பாகத்தின் கதை முழுக்க சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறதாம்.அதனால் மொத்தப் படப்பிடிப்பையும் அங்கேயே நடத்திவிடுவது என்கிற முடிவை எடுத்திருக்கிறார்களாம்.

இதற்காக படப்பிடிப்பு நடத்தும் இடங்கள் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

இரண்டாம் பாகத்தை ஐசரிகணேசின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுவிட்டன என்றும் சொல்லப்பட்டது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த இப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்றொரு அதிர்ச்சித் தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.

அதற்குக்காரணம், இனிமேல் நரைத்த மீசை தாடியுடன் கூடிய வயதான வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று விஜயசேதுபதி திடீர் முடிவை எடுத்துவிட்டார்.அதனால் இந்தப்படம் நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம், இப்படத்தின் திரைக்கதை தொடர்பாக இயக்குநருக்கும் விஜய்சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதென்று சொல்லப்படுகிறது.அதனால் இந்தப்படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஆர்வம் காட்டவில்லையென்று சொல்கிறார்கள்.

இவற்றில் எதுசரி? என்பது சம்பந்தப்பட்டோருக்கே வெளிச்சம்.ஆனால் 96 படத்தின் இரண்டாம்பாகம் நடக்கவில்லை என்பது நிஜம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.