இன்றைய இளைய தலைமுறையின் நட்பு, காதல்,மோதல் ஆகியனவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் படமாக வந்திருக்கிறது ஓகோ எந்தன் பேபி.
திரைத்துறையில் உதவி இயக்குநராக இருக்கும் படத்தின் நாயகன் ருத்ரா, திரைப்பட நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷாலுக்குக் கதை சொல்லப்போகிறார்.ஒரு நிர்ப்பந்தம் காரணமாக தன்னுடைய காதல் கதையையே சொல்ல நேர்கிறது.அந்தக் கதை முழுமை பெறாமல் இருக்கிறது.அதற்குக் காரணம் நிஜத்திலும் அந்தக்காதலில் சிக்கல் இருக்கிறது.மீதிக்கதையைச் சொன்னால்தான் இயக்குநராக முடியும் எனும் நிலை.இந்நிலையில் நாயகன் என்ன செய்கிறார்? அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன்? என்பதை இளமைத் துடிப்போடு சொல்ல விழைந்திருக்கிறது படம்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் விஷ்ணுவிஷாலின் பெரியப்பா மகன் ருத்ரா, அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவ நடிகர் போல் நடித்திருக்கிறார்.அறிமுக நடிகர்கள் காதல் காட்சிகளில் கூச்சப்படுவார்கள்.இவர் ஒன்றுக்கு இரண்டு பேரோடு புகுந்து விளையாடுகிறார்.கோபம், மற்றும் சோக உணர்வுகளையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் மிதிலா பாஸ்கர்,அஞ்சுகுரியன் ஆகியோர் அழகும் இளமையுமாக இருக்கிறார்கள்.இவர்களில் மிதிலா பாஸ்கர் வேடம் சில இடங்களில் கோபமூட்டுவதாக இருக்கிறது.அஞ்சுகுரியன் வேடம் இதமானதாக இருக்கிறது.
இயக்குநர் மிஷ்கின், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் வேடங்கள் சிரிக்கத்தக்க அமைந்து படத்தை இலகுவாக்கியிருக்கிறது.கீதா கைலாசம்,கஸ்தூரி ஆகியோர் நன்று.
ஹரீஷ்கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாகவும் இளமைத் துள்ளலோடும் அமைந்திருக்கின்றன.
ஜென்மார்ட்டினின் இசையில் பாடல்கள் கதையின் போக்கை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.பின்னணி இசை காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது.
படத்தைத் தொகுத்திருக்கும் கண்ணா, முடிந்தவரை வேகமாகக் கொண்டு செல்லப் பாடுபட்டிருக்கிறார்.
நடிகர் கிருஷ்ணாவாக அறியப்பட்ட கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.ஒரு காதல்கதையை திரைப்படப் பின்னணியோடு கோர்த்திருப்பதால் பல சுவையான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் வைக்க முடிந்திருக்கிறது என்பதால் இது நல்ல உத்தியாக இருக்கிறது.இன்றைய இளம் தலைமுறை காதல் உணர்வுகளை எவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்? அதனால் என்னென்ன நடக்கின்றன? என்பதை விரல் நீட்டி வசனங்களில் மட்டும் சொல்லாமல் காட்சிகளிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.
2கே கிட்ஸ் எனப்படும் இரண்டாயிரத்து இளையதலைமுறைக்கான இனிப்பான பாடம் இந்தப்படம்.
– கதிரோன்