விஷாலை வைத்து இதற்கு முன் ‘ஓடாத விளையாட்டுப்பிள்ளை’ படம் எடுத்த திருவின் இயக்கத்தில், அடுத்து படப்பிடிப்பு முடியும் தறுவாயிலிருக்கும் ‘சமரன்’ படத்தின் டைட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென ‘சமர்’ என மாறியது.
இந்த டைட்டில் மாற்றத்தின் பின்னணியில் விஷால் தரப்புக்கும், சீமானுக்குமிடையில்
நடந்த சமர் ஒன்று இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்படி ‘சமரன்’ தலைப்பை சில வருடங்களுக்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிந்து வைத்திருந்த சீமான், அதை கடந்த வருடம் புதுப்பிக்க மறந்து விட்டாராம்.
இந்நிலையில், விஷாலின் ‘சமரன்’ துவங்கப்பட்டபோது, இயக்குனர் திருவை தொடர்பு கொண்ட சீமான், ‘’நான் புதுப்பிக்க மறந்ததைப் பயன்படுத்தி ‘சமரன்’ தலைப்புக்கு நீங்கள் சொந்தம் கொண்டாட நினைப்பது சரியாகாது. குறைந்த பட்சம், நீயும் விஷாலும் என்னிடம் அனுமதி கேட்டிருந்தால் கூட விட்டுக்கொடுத்திருப்பேன்.அதை விட்டுவிட்டு சமயோசிதம் என்று நினைத்து நீங்கள் என் தலைப்பை திருடியிருப்பது தவறான செயல்’ என்றாராம்.
ஆரம்பத்தில் சீமானின் சொல்லை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாத விஷால் தரப்புக்கு படம் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க, சீமானின் நாம் தமிழர் கட்சி தோழர்கள் தொடர்ந்து போன் செய்ய, வம்பை விலை கொடுத்து வாங்குவானேன் என்று முடிவு செய்தே டைட்டிலை ‘சமர்’ என்று மாற்றினார்களாம்.
சீமான் எங்கும் புரியத்தயாராய் இருக்கும் சமரை விஷால் ஒன்லி சினிமாவில் மட்டும்தான் போடுவார் போலும்.