இது யூடியூப் காலகட்டமாக இருக்கிறது.நவீன கைபேசி வைத்திருக்கிற எல்லோருமே யூடியூபர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் பல தப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து அப்படிச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக வெளியாகியிருக்கும் படம் டிரெண்டிங்.
நாயகன் கலையரசன்,நாயகி பிரியாலயா ஆகிய இருவரும் கணவன் மனைவி.இவர்கள் வலையொளி ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது வலையொளி அழிந்துவிடுகிறது.வருமானம் இன்றி கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.அப்போது, தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார்.கடுமையான விதிமுறைகள் கொண்ட அப்போட்டியில் பங்கேற்கிறார்கள். அதனால் பல சிக்கல்கள்.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் திரைக்கதை.
கலையரசனும் பிரியாலயாவும், தாம் இருவரும்தான் படத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய பாத்திரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
பிரேம் குமார், பெசண்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோர் நடிப்பும் நன்றாக அமைந்திருக்கிறது.
மிகக் குறுகிய கதைக்களம் என்றாலும் அதை வைத்துக் கொண்டு காட்சிகளில் வேறுபாடு காட்டி பட்த்தை இலகுவாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும்வண்ணம் அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு இரசிக்க வைத்திருக்கிறார்.
நாகூரான் இராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.படம் வேகமாக நகரவேண்டும் என்கிற சிரத்தையுடன் உழைத்திருப்பது தெரிகிறது.
வலையொளிகளால் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டியதோடு,ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் அதிர்ச்சியூட்டும் சில நிகழ்வுகளைக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவராஜ்.
– இளையவன்