அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன். பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான 24.07.2025 அன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அருண் பிரபு, தனஞ்செயன், கார்த்திக் நேத்தா, திருப்தி, அரவிந்த் ராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசுகையில்….
நான் எப்போதுமே வேலை வேலை என்று வேலையில் கவனம் செலுத்துவதனால் எனக்கு பத்திரிகை நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் நான் சமீபத்தில் கொடுக்கும் அனைத்து நேர்காணல்களிலும் மிகவும் காமெடியாகவும், ஜாலியாகவும் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் டாப் 5 படங்களில் அருவி ஒரு படம். அதே போல் இந்திய அளவில் டாப் 3 இயக்குநர்களில் அருண் பிரபு ஒருவர். சர்வதேச அளவில் படம் எடுக்கக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது.எப்போது அருண் வந்தாலும் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் அவருக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன்.
ஷெல்லியின் சப்போர்ட் இல்லாமல் அருண்பிரபு அவர்களால் அருவியைச் செய்திருக்க முடியாது. ஷெல்லி அருணுக்கு மனைவி போன்றவர். இவர்கள் இருவரும் இணைந்து பெரிய அளவில் படங்களை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். அருண் பிரபு அடுத்து இயக்கும் படம் பெரியபடமாக தான் இருக்க வேண்டும். கார்த்திக் நேத்தா அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எப்போதுமே மகிழ்ச்சியான தருணமாகத் தான் இருந்திருக்கிறது. நான் சில காலமாக இசையமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன் அப்போது மீண்டும் கார்த்திக் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
அருண்பிரபு எப்போதுமே கதாநாயகியைத் தேர்வு செய்வதில் தனித்தன்மையாக இருப்பார். அவர் படங்களில் இருக்கும் நாயகிகள் பக்கத்து வீட்டுப் பெண்கள் போலத் தான் இருப்பார்கள். அதுபோலத்தான் இந்தப் படத்திற்கும் யாரைத் தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திருப்தியை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரும் மிகவும் நன்றாக இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்.அவர் மென்மேலும் வளர வாழ்த்துகள்.இப்படத்தில் பணியாற்றிய அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில்….
மார்கன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். விஜய்ஆண்டனி அவர்களைப் பற்றி நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். விஜய்ஆண்டனி பிலிம் கார்பரேஷன் தயாரித்த எந்தப்படமும் தோல்வி அடைந்ததில்லை.
விமர்சன ரீதியாக வெற்றியடையாவிட்டாலும், வணிக ரீதியாக வெற்றியடையும். தமிழ் சினிமாவில் படங்களை பிஸினஸ் செய்யும் நுட்பம் யாருக்கும் தெரியாது. ஆனால், விஜய் ஆண்டனியின் படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக சிறப்பாக கையாண்டுவிடுவார். இப்படத்தின் திரையரங்கு உரிமையை தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் விற்றுவிட்டார் விஜய் ஆண்டனி.
நாம் அனைவரும் பார்த்து வியந்த ஒரு இயக்குநர் தான் அருண் பிரபு. இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். இதற்கு முன் அவர் இயக்கிய அருவி மற்றும் வாழ் படத்திலிருந்து இப்படம் மாறுபட்டு இருக்கும். இப்படத்தின் மூலம் திருப்தி அறிமுகமாகிறார் அவருக்கு வாழ்த்துகள். ஒரு முழு கமர்ஷியல் படமாக சக்தித் திருமகன் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில்….
முதலில் விஜய்ஆண்டனி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.அவருக்கு இது 25 ஆவது திரைப்படம்.அவரைப்பற்றி பேசும்போது மலரும் நினைவுகள் தான் வருகிறது.நான் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் போது சூளைமேடு கில் நகரில் அவர் ஸ்டுடியோ வைத்திருந்தார். ‘நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்’ என்ற பாடல் மிகவும் பிரபலமான காலகட்டம் அது.அந்தசமயத்தில்தான் நான் அவரது ஸ்டுடியோவிற்கு சென்று வாய்ப்பு கேட்டேன்.அந்தப் பாட்டையே வேறு மாதிரி எழுதிக் கொடுங்கள் என்று எனக்குத் தேர்வு வைத்தார். நானும் எழுதிக் கொடுத்தேன்.அதைப் பார்த்துவிட்டு மெட்டுக்குள் வரும்படி நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.நான் அழைக்கிறேன் என்று கூறினார்.சிறிது நாட்களிலேயே ஒரு தொடருக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு பாடலுக்கு மெட்டு கொடுத்து எழுதச் சொன்னார்.’என்னைத் தேடி காதல் என்னும் தூது அனுப்பு’ என்ற மெட்டுக்கு நான் எழுதிக் கொடுத்தேன்.என்னோடு சேர்ந்து தேன்மொழி தாஸ் என்கிற கவிஞரும் பாடல் எழுதினார். அவருடைய வரிகள் ஆழமாக இருந்ததால் அவருடைய வரிகளையே எடுத்துக் கொண்டார்கள்.அதன்பிறகு நான் வாய்ப்பு தேடவில்லை.நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று இருந்தேன்.அப்போது விஜய் ஆண்டனி சார் இசையமைக்கவில்லை ஆனால் அவர் நடித்த கொலை படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ரோமியோ படத்தில் நான் எழுதிய ‘சிடு சிடு’ பாடல் நன்றாகப் பேசப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சாருக்கு நான் எழுதும் முதல் படம் இது.அந்தவகையில் எனக்கும் இந்தப்படம் ஸ்பெஷல் திரைப்படம் தான். அருண் உடைய முதல் இரண்டு படங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.அருவி மற்றும் வாழ் போன்ற திரைப்படங்களை நுணுக்கமாகக் கவனித்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சமூகமாகவும் அரசியலாகவும் உளவியல் ரீதியாகவும் சரி இல்லை என்று தோன்றுகின்ற படமாக இருக்கும்.அதிலும் அருவி நாம் தப்பு தப்பாக வாழ்ந்து கொண்டு சமூகத்தைத் தவறாகச் சொல்கிறோம் என்று நம்மைக் கேள்வி கேட்கும் படமாகவும், சுட்டிக் காட்டுகின்ற படமாகவும் இருக்கும்.
ஒரு தனி மனிதன் சரியாக இல்லை என்றால் ஒரு சமூகம் சரியாக அமையாது என்பதை மிக அழகாக,ஆழமாக வாழ் படத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் என்பதைத் தாண்டி நாம் தேடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை முன்பும் பின்பும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அது நமக்குப் புரியவில்லையே என்கிற ஏக்கம் இந்த இரண்டு படங்களிலும் இருந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக வாழ் படத்தை வைத்து சமூகத்தில் நாம் கலந்து ஆலோசத்திருக்க வேண்டிய படம்.அந்தவரிசையில் இந்தப் படமும் நியோ பொலிட்டிக்கல் பேசும்படமாக வந்திருக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.பாடல் எழுதும் போது இந்தப்படத்தின் கதை தெரிந்துவிட்டது. அதிலும் குறிப்பாக இரண்டாவதாக வந்திருக்கும் வாகேஷின் பாடல் வரிகள் ஆகவும் மெட்டாகவும் சிறப்பாக இருக்கிறது.இந்தப்பாடல் வரிகளில் தமிழ் மொழியின் ஆளுமைகளான முருகனும் வந்திருந்ததில் பெரு மகிழ்ச்சி.
நான் எழுதிய வரிகளைப் பாடிய நண்பருக்கு நன்றிகள்.அருணுக்குள் ஆழமான தெளிவான தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது அடுத்தடுத்த படங்களிலும் அதைச் செய்வார்.இந்தப்படத்தைப் பார்த்த பிறகு, நுட்பமான விஷயங்கள் நிறைய இருக்கிறது அதுபற்றிப் பேசலாம். அன்புத்தம்பி தின்சாவுக்கு வாழ்த்துகள். நாங்கள் இருவரும் இதற்கு முன்பு மனிதர்கள் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். நாம் வாழக்கூடிய நிலத்திற்கு ஏற்ற பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுதான் ஆக்கப்பூர்வமானது. மாநில திரைப்படங்கள் எப்போதும் சர்வதேச திரைப்படங்களாக இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். அதை நம் தமிழ்ப் படங்கள் கொடுத்துக் கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகியை தமிழ் சினிமா வரவேற்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துகள். இப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் அனுஷா மீனாக்ஷி பேசுகையில்….
விஜய் ஆண்டனி சாருடன் நான் இணைந்து பணியாற்றும் 5 ஆவது படம் இது.எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படம், காரணம் இது விஜய் ஆண்டனி சாரின் 25 ஆவது படம். இப்படத்தில் நாங்கள் சந்தோசமாகப் பணியாற்றினோம். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி
என்றார்.
மாஸ்டர் கேசவ் பேசுகையில்….
சக்தித் திருமகன் என்னுடைய இரண்டாவது படம், இப்படத்தில் நான் நடித்தது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பாகப் பார்க்கிறேன். இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நினைவுகள் கிடைத்துள்ளது. எனக்கு வாய்ப்பளித்த அருண் சார் மற்றும் விஜய் ஆண்டனி சார் அவர்களுக்கு நன்றி என்றார்.
நாயகி திருப்தி பேசுகையில்….
அனைவருக்கும் வணக்கம், நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இந்த வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. காஸ்ட்யூம், லைட், கேமரா என அனைத்துத் துறையினரும் மிக ஒழுக்கமாக இருந்தனர். ஷெல்லி சார் இப்படத்திற்காக நிறைய உழைதிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் இப்படத்தின் செட்டில் என்னை சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். அருண் பிரபு சாருக்கு நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட் பேசுகையில்….
10 ஆண்டுகளுக்கு முன் நான் அருண் அவர்களிடம் நீ என்ன மாதிரியான படத்தை இயக்கப் போகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவர் என் படங்கள் அனைத்திலும் அரசியல் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றால் தினசரி நடக்கும் அரசியல் விசயங்களை அவர் பதிவு செய்து வைத்திருப்பார். மிக ஆழமான அரசியலை அவர் புரிந்து வைத்துள்ளார். இப்படம் சிறப்பாக வந்துள்ளது, நன்றி என்றார்.
இயக்குநர் அருண் பிரபு பேசுகையில்….
பொதுவாகவே எனக்கு ஜனரஞ்சகமான அரசியல் படம் பார்க்கப் பிடிக்கும், அப்படிப்பட்ட படம் தான் சக்தித்திருமகன் படமும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் இருக்கும். ஒரு கதையைச் சொல்லும்போது ஒரு பதட்டம் எப்போதுமே இருக்கும். அந்தப் படத்தில் ஹீரோயிசமும் இருக்கும்.அதை இப்படத்தில் நான் இயக்கியுள்ளேன்.அருவி படத்தில் எந்த அளவிற்கு உழைத்தோமோ அதே உழைப்புதான் இப்படத்திலும் செய்திருக்கிறேன். இப்படத்திற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.