முகலாய மன்னரின் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோகினூர் வைரத்தைத் திருடச் செல்கிறார் நாயகன் பவன்கல்யாண்.எதற்காக அதைத் திருட நினைக்கிறார்? அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ஹரிஹரவீரமல்லு.
பவன்கல்யாண் நன்றாகச் சண்டை போடுவார்,நன்றாக நடனம் ஆடுவார்,பக்கம் பக்கமாக வசனங்கள் இருந்தாலும் அசால்ட்டாகப் பேசுவார் என்பதெல்லாம் ஏற்கெனவே தெரிந்த விசயம்.அவற்றை இந்தப்படத்திலும் குறைவின்றிச் செய்திருக்கிறார்.இந்தமுறை வசனங்களில் அரசியல் நெடி அதிகம் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கிறார் நிதிஅகர்வால்.சண்டைப் படங்களில் கதாநாயகிகளுக்கு எவ்வளவு இடம் கிடைக்குமோ? அவ்வளவு இடம்தான் இந்தப்படத்தில் அவருக்குக் கிடைத்திருக்கிறது.கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் இருப்பதைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் பாபிதியோல்,அந்த வேடத்துக்குரிய உருட்டல் மிரட்டல்களைத் தெளிவாகச் செய்திருக்கிறார்.கதாபாத்திரத்தின் தன்மையில் விமர்சனங்கள் இருந்தாலும் தன் நடிப்பால் அவற்றை மறக்க வைக்கிறார்.
நாசர்,சத்யராஜ், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேகி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி என படத்தில் நிறைய அனுபவ நடிகர்கள்.படம் இலகுவாக நகர அனைவரும் பயன்பட்டிருக்கிறார்கள்.
கீரவாணியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை பவன் கல்யாணின் இமேஜை உயர்த்தப் பயன்பட்ட்டிருக்கிறது.
ஞானசேகர்.வி.எஸ் மற்றும் மனோஜ்பரமஹம்சா ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.மிகக் கடும் உழைப்பு தேவைப்படும் கதைக்களம் அதற்குத் தக்க உழைத்திருக்கிறார்கள்.இதனால் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதிகிருஷ்ணா.
பவன்கல்யாணை வைத்து ஒரு மாஸ் ஆக்ஷன் படம் கொடுக்கவேண்டும் அது அவருடைய இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காமல் இப்படம், அவருடைய அரசியல் பயணத்துக்கும் பயன்படும் வகையில் அமைய வேண்டும் என்று திட்டமிட்டு இயக்கியிருக்கிறார்.
மாஸ் ஆக்ஷன் படங்களுக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தாலும் மதம் சார்ந்த விசயங்கள் நாட்டின் பன்முகத்தன்மைக்கு வேட்டுவைக்கும் விதமாக அமைந்திருக்கிறது.மதம் தொடர்பான காட்சிகளில் செயற்கைத் தனம் நிறைந்திருக்கிறது.
இவை இல்லாமல் இருந்திருந்தால் பார்த்து விசிலடித்துக் கொண்டாடும் ஒரு ஆக்ஷன் படமாக இருந்திருக்கும்.
– இளையவன்