அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்,அவரை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைக்கிற ஒரு திருடன்.இந்த இருவரையும் மையமாக வைத்து ஒரு முக்கியமான சமுதாயச் சிக்கலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் மாரீசன்.
வடிவேலு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்.அவர் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க திருடன் எனத் தெரியாமல் பகத்பாசில் உதவியை நாடுகிறார்.அவரிடம் பெரும் தொகை இருப்பதை அறிந்து அந்தப்பணம் மொத்தத்தையும் கைப்பற்றும் திட்டத்துடன் அவருடன் பயணிக்கிறார் பகத்பாசில்.அந்தப் பயணத்தில் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்கின்றன.அவை என்னென்ன? அவை எதனால் நடக்கின்றன? என்பதை விவரித்திருக்கிறது படம்.
நகைச்சுவை மட்டுமின்றி அழுத்தமான நடிப்பையும் என்னால் கொடுக்கமுடியும் என்று மாமன்னன் படத்தில் நிரூபித்தார் வடிவேலு.அதை உறுதிப்படுத்தும் வண்ணம் இந்தப்படத்தில் அவருக்கு வேடம் அமைந்திருக்கிறது.அதற்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார்.மறதி நோயாளர் போல் அவர் நடித்திருக்கும் பல காட்சிகள் பெரிதும் பேசப்படுபவையாக அமையும்.
வடிவேலு அமைதி என்றால் அதற்கு நேரெதிரான வேடம் பகத் பாசிலுக்கு.தன் தேர்ந்த நடிப்பால் அந்த வேடத்தைப் பன்மடங்கு உயர்த்திப் பிடித்திருக்கிறார்.நாம்தான் புத்திசாலி என்று நினைத்து இறுமாப்பாக இருக்கும் அவர் தான் ஏமாந்துவிட்டோம் என்று உணரும் நேரத்தில் காட்டும் முகபாவம் இரசிக்கக்கூடியது.இறுதிக்காட்சிகள் அவருக்குக் கூடுதல் பலம்.
கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா என படத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.எல்லோருமே அளவெடுத்துத் தைத்த சட்டைபோல் இருக்கிறார்கள்.
யுவன் இசையமைத்திருக்கிறார்.ஆனால் இளையராஜா பாடல்கள் தாம் இரசிக்க வைக்கின்றன.பின்னணி இசையில் தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார் யுவன்.
ஒளிப்பதிவாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய திரைக்கதை அமைந்திருப்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் கலைச்செல்வன் சிவாஜி.காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்திருக்கிறார். முன்பாதியில் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் கூர்மையாகியிருக்கும்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படைப்பு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார் வி.கிருஷ்ணமூர்த்தி.இயக்கியிருக்கிறார் சுதீஷ்சங்கர்.
சமுதாயத்தில் நடக்கும் ஒரு முக்கிய சிக்கலைப் பற்றிப் பேசி கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.அதற்கான திரைக்கதை வடிவமும் சுவாரசியமாக அமைந்திருக்கிறது.பல இடங்களில் அவற்றை வசனம் மூலம் சொல்லியிருப்பதுதான் பின்னடைவு.
– இளையவன்