இந்துக்கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் என்றொரு கதை உண்டு.அந்த பத்து அவதாரங்கள், பொதுவாக “தசாவதாரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை: மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனன், பரசுராமன், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி.
இந்த பத்து அவதாரங்களும் மகா விஷ்ணுவால் பூமியில் வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு அவதாரமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனும், தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இவற்றில் நரசிம்ம அவதாரம் என்பது நான்காவது அவதாரம் என்று சொல்லப்படுகிறது. இந்த அவதாரத்தில் மகா விஷ்ணு மனித உடலும், சிங்க முகமும் கொண்டவராக அவதரித்து,அரக்கன் இரணியகசிபுவை அழித்தார் என்று சொல்லப்படுகிறது.
கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தவன் பிரகலாதன். இரணியகசிபு, தான் பெற்ற சாகாவரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், பிரகலாதன் தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது,விஷ்ணு தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதித்தார், ஆனால் பிரகலாதன்,விஷ்ணுதான் தன் கடவுள் என்று கூறினான்.
இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்ற சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களில் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடறச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்று செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
பிரகலாதனைக் கொல்ல எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன், தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப்போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள்ர எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.
இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, அங்கிருந்து விஷ்ணு, நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.
பல்லாண்டுகளாகச் சொல்லப்பட்டுவரும் இந்தக்கதைக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் படம் மகா அவதார் நரசிம்மா.
திரைக்கேற்ற கதையை ஜெயபூர்ணதாஸ் எழுதியுள்ளார்.திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அஸ்வின்குமார்.சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
சிறுவர்களுக்கும் புரியும்படி கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் திரையரங்க அனுபவத்தைக் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார்கள்.