மணமுடிப்பதற்காகப் பார்த்த பெண் நித்யாமேனனை காதலித்து மணம் புரிகிறார் விஜய்சேதுபதி.கல்யாணம் ஆன பின்பு எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை உட்பட எல்லா விசயங்களும் நடக்கின்றன.அதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிய நேர்கிறது.பிரிந்தவர்கள் கூடினார்களா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி.
தான் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து அதுவாகவே மாறக்கூடியவர் விஜய்சேதுபதி.இந்தப்படத்தில் புரோட்டா கடைக்காரராகவே மாறியிருக்கிறார்.காதலனாகவும் கணவனாகவும் பொருந்தியிருக்கிறார்.இந்தக் கதாபாத்திரத்தைக் கூடுதல் ஈடுபாட்டுடன் உள்வாங்கி நடித்திருக்கிறார் என்பது காட்சிகளில் புலனாகிறது.
விஜய்சேதுபதிக்கு ஏற்ற இணையராக நித்யாமேனன் நடித்திருக்கிறார்.அவருடைய கதாபாத்திரத்துக்கும் நடிப்புக்கும் பூசினாற்போன்ற உடல் பலமாக அமைந்திருக்கிறது.
விஜய்சேதுபதியின் பெற்றோராக நடித்திருக்கும் சரவணன், தீபா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.நித்யாமேனனின் பெற்றோராக செம்பன் வினோத், ஜானகி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பெற்றோராக இருக்கும்போது இருப்பதற்கும் மாமனார் மாமியார் ஆன பிறகு நடந்து கொள்வதற்குமான வேறுபாடுகளை தங்கள் நடிப்பில் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் ஆகியோரும் கவனிக்கத்தக்க நடித்திருக்கிறார்கள்.
யோகிபாபு வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.
சந்தோஷ்நாராயணனின் இசையில் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன.பின்னணி இசையில் கதையோட்டத்துக்கு மாறுபட்ட் தோற்றம் கொடுத்துள்ளார்.
வண்ணமயமாகக் காட்சிகளை அமைத்து படத்தை ம்கிழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவுக்கு சவாலான படமாக இருந்திருக்கும்.எதை விட்டாலும் தொடர்ச்சி கெட்டுப்போகும் அதே சமயம் நீளமும் அதிகரித்துவிடக் கூடாது என்கிற இரண்டுக்குமிடையில் போராடியிருக்கிறார் என்பது தெரிகிறது.
குடும்ப உறவுகளின் புற உணர்வுகளைப் பற்றிய பொதுப்புத்திக் கருத்துகளைப் பல படங்களில் பேசியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜ்,இந்தப் படத்தில் அவர்களின் மனோநிலை அதனால் ஏற்படும் விளைவுகள் என அகவுணர்வுகளை ஆய்ந்து நுட்பமான விசயங்களைச் சொல்லியிருக்கிறார்.சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் சின்னச் சின்ன விசயங்கள் ஒருங்கிணைந்து எவ்வளவு பெரிய விசயமாகிறது என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.
சொல்ல வந்த விசயங்களை அதன் குணத்துக்கேற்ப சொல்லிவிடாமல் எல்லாவற்றிற்கும் நகைச்சுவை முலாம் பூசியிருக்கிறார்.சில இடங்களில் அது பலவீனமாக அமைந்து காட்சியின் தன்மையை பலவீனப்படுத்தினாலும் பல இடங்களில் பலமாக அமைந்து படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.
– இளையவன்