மலைக் கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்கள் படத்தை கமர்சியல் அம்சங்களுடன், வெற்றி இலக்கை எளிதாக தொட்டுவிடும் முயற்சியாக தான் இயக்கி வருகிறார்கள். வணிக வெற்றி என்பது இன்றைய நாளில் இயக்குநர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகப்பெரிய அவசியமாகிறது.

அதே சமயம் வெகு சில இயக்குநர்கள் தான், இந்த மண் பற்றியும் மண்ணின் மைந்தர்கள், அவர்களது வலி நிறைந்த வாழ்க்கைகள் இவற்றைப் பற்றியும் திரைப்படங்களாக எடுக்க வேண்டும்,, அதை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், தன்னுடைய படங்கள் மூலமாக அவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்கிற நோக்கில் படங்களை உருவாக்கி வருகின்றனர்,.

அப்படி சமூக நோக்கில், பல வருடங்களாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வருகின்ற, தமிழகத்தில் இருக்கும் வெள்ளக்கெவி என்கிற ஒரு மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கெவி’ என்கிற படத்தை இயக்கியவர் தான் இயக்குநர் தமிழ் தயாளன்.

ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வெளியான இந்த படத்தில் ஆதவன், ’மண்டேலா’ புகழ் நாயகி ஷீலா, விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.. இந்த படம் தற்போது மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

‘கெவி; படத்திற்கான மக்கள் வரவேற்பு குறித்து இயக்குநர் தமிழ் தயாளன் பேசும்போது, “கெவி படம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட 10 படங்கள் கூடவே வெளியாகின. ஆனால் எங்கள் படம் தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது பெருமையான விஷயம். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக படம் பார்த்த பெண்கள் பலரும் அழுது கொண்டே வெளிவருவதை பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு அவர்கள் கதையுடன், கதை மாந்தர்களுடன் ஒன்றி விட்டார்கள்.

குறிப்பாக கர்ப்பிணி பெண் கதாபாத்திரமும், அவள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க நடத்தும் போரட்டமும் கிளைமாக்ஸும் அவர்களை ரொம்பவே கண் கலங்க வைத்துவிட்டது. அதை இந்த படத்துக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன்.

இந்த கதையை நேர்மையாக கொடுத்துள்ளோம். அதற்கு கிடைத்த வரவேற்பு தான் இது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த அந்த மலை கிராமத்து மக்கள், எங்களது வலி நிறைந்த வாழ்க்கையையும் நாங்கள் சந்திக்கும் அவலங்களையும் இவ்வளவு தெளிவாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளீர்கள் என கண் கலங்கியபடியே கூறினார்கள். இந்த படம் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட கெமி கிராமத்தை பார்ப்பதற்காக பலரும் கிளம்பி செல்ல துவங்கி உள்ளனர். ஓரளவு தற்போது அந்த கிராமம் கவனம் பெற ஆரம்பித்துள்ளது.

இந்த படத்தில் காட்டப்படும் மலை கிராமத்திற்கு உரிய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த படத்தை பார்க்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்தப்படத்தை அவர்கள் பார்த்தால் அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கை முறைக்கு என்ன விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உணர்ந்து அதை செயல்படுத்த ஆரம்பித்தார்கள் என்றாலே, அது இந்த படம் எடுத்ததற்கான குறிக்கோளை நிறைவு செய்யும்” என்று கூறினார்.

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.