அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டைச் சீரழிக்க ஒரு பெரிய குழு திட்டமிடுகிறது.சமுதாயத்தில் ஒரு சாதாரண இளைஞனாக இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி முறியடிக்கிறார்? என்பதைச் சொல்வதுதான் மதராஸி.
முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோ எனச் சொல்லப்படும் சண்டை நாயகனாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது.அதேபோல் இதுவரை ஏற்காத ஒரு வேடமான மனநலச் சிக்கல் கொண்ட இளைஞன் வேடத்தை ஏற்று அதைத் திறம்படச் செய்ய மெனக்கெட்டிருக்கிறார்.பல இடங்களில் பிதாமகன் விக்ரம் நினைவுக்கு வருவது அவருக்குப் பலம்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் அழகிய வரவு.நன்றாக இருக்கிறார்.அழகாக நடித்திருக்கிறார்.அவருடைய பாத்திரப்படைப்பும் சிறப்பு.
வில்லனாக நடித்திருக்கும் வித்யுத் ஜமாலுக்கு ஒரு கதாநாயகனுக்குரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆர்ப்பாட்டமான அறிமுகக் காட்சி, பஞ்ச் வசனம்,அலட்சிய உடல்மொழி,அட்டகாசமான சண்டைக் காட்சிகள் ஆகிய எல்லாம் அவருக்குக் கிடைத்திருக்கிறது.அவரும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பேறுகிறார்.
தேசிய புலனாவு முகமையின் முக்கியஸ்தராக நடித்திருக்கும் பிஜிமேனனின் அனுபவ நடிப்பும் அவர் மக்னாக துடிப்புடன் நடமாடும் விக்ராந்த் மற்றும் அந்தக் குழுவினர் நடிப்பும் இயல்பு.
இன்னொரு வில்லனாக இருக்கும் சபீர், மருத்துவர் தலைவாசல் விஜய்,சில காட்சிகளில் வரும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் நிறைவு.
சுதீப் இளமான் ஒளிப்பதிவில் காதல்காட்சிகள் இனிமையாகவும் சண்டைக்காட்சிகள் வ்ன்மையாகவும் அமைந்திருக்கின்றன.
அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை தாழ்வில்லை.
படத்தைத் தொகுத்திருக்கும் ஸ்ரீகர்பிரசாத் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் மையக்கதை,காட்சியமைப்புகள், பாத்திரப்படைப்புகள் மற்ரும் அதற்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மனநலக் குறைபாடு என்று சொல்லப்படுபவன்தான் சரியானவன் நாட்டுக்குத் தேவையானவன் என்கிற கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
– பொழிலன்