கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் பல்டி.
நாயகன் ஷேன்நிகமும் சாந்தனுவும் பஞ்சமி எனும் கபடிக்குழுவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பொற்றாமரை எனும் அணியை செல்வராகவனும் ஷோ பாய்ஸ் டீம் எனும் அணியை அல்போன்ஸ் புத்திரன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பஞ்சமி அணியில் இருக்கும் சாந்தனுவை தங்கள் அணிக்காக விளையாட அழைக்கிறார்கள்.இரு அணிகளில் ஓரணியில் விளையாட வேண்டும் என்கிற சூழலில் சாந்தனுவை ஆபத்து சூழ்கிறது.அதிலிருந்து அவரை மீட்க ஷேன்நிகம் களமிறங்குகிறார்.அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை இரத்தம் தெறிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் ஷேன்நிகம்,துடிப்பான விளையாட்டுவீரர் மற்றும் நண்பனுக்காகப் போராடும் உணர்ச்சி மிகுந்த வீரராக நடித்திருக்கிறார். வேடத்துக்குத் தக்க உடலையும் நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.
கதையோட்டத்துக்கான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சாந்தனுவுக்கு இது நற்பெயர் பெற்றுத் தரும் வேடமாக அமைந்திருக்கிறது.அவரும் அதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகி பிரீத்தி அஸ்ரானிக்குக் காட்சிகள் குறைவு என்றாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
செல்வராகவன்,அல்போன்ஸ்புத்திரன் ஆகிய இரு இயக்குநர்களும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.இருவருடைய தோற்றங்களும் இரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளிலும் எதிரொலித்து நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் இரசித்துக் கேட்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், விளையாட்டில் வீரர்களாக இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் தாதாக்கள் பிடியில் சிக்கி வன்முறைச் சூழலுக்கு இடம்மாறுகிறார்கள் என்பதை உணர்வுப் பூர்வமாகச் சொல்ல முனைந்திருக்கிறார்.அவருடைய கதைக்கு இதில் நடித்திருக்கும் நடிகர்கள் வலுச் சேர்த்திருக்கிறார்கள் என்பதால் அவர் எண்ணம் ஈடேறியிருக்கிறது.
– கதிரோன்

