சென்னை பி.வி.ஆர்.திரையரங்கில் பிரமாதமான ஒலிஅமைப்பில் ஓடு மில்கா ஓடு படம் பார்த்தேன்.
1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டு தங்கத்தைத் தவறவிட்ட தட கள வீரர் மில்காசிங், பின் 1960 ரோமில் நடந்த ஒலிம்பிக்
போட்டியில் முந்தைய சாதனையை முறியடித்தவர். 400 மீட்டர் ஓட்டத்தின் உலக சாதனையான 45.90 என்பதை 45.80ஆக மாற்றியவர். சுதந்திரத்திற்கு முந்தைய பாகிஸ்தானில் பிறந்த மில்கா சிறுவனாய் இருக்கையில் பிரிவினையில் கூடும்பத்தினரை கண்முன்னால் சாகக்கொடுக்கிறார். மகனை எதிரிகளிடமிருந்து காக்க வேண்டி இறக்கும் தறுவாயில் ‘ஓடுமில்கா ஓடு’ என்ற தந்தையின் குரலும் ஓடுகளத்தில் பயிற்சியாளரின் ‘ஓடு மில்கா ஓடு’ என்ற குரலும் படத்தின் ஊடுசறடாக திரைக்கதையில் இணைக்கப்பட்டுள்ளவிதம் நேர்த்தி.
ஹாலிவுட்டில் இத்தகைய படங்கள் நிறைய உண்டு என்றாலும் ஹாலிவுட்டின் தொழில் நேர்த்தியை அப்படியே சாத்தியப்படுத்துவதில் இந்தித் திரையுலகம் வேகமாக வளர்ந்து வருவதை சமீபகால இந்திப் படங்கள் புலப்படுத்துகின்றன.. மில்காசிங்கின் உண்மைக்கதையா அல்லது திரைப்படத்திற்கான புனைவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனக்கு மொழி புரியாததனால் படம் கொஞ்சம் நீளமாகத் தோன்றினாலும் திரைக்கதையும் ஒளிப்பதிவும் இசையும் இன்னபிற அம்சங்களும் மூன்றுமணி நேரப் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றன.
ப்ரசூன் ஜோஸியின் (Prasoon Joshi) திரைக்கதைதான் வரலாற்றை சுவாரஸ்யமான திரைப்படமாக மாற்றியிருக்கிறது.
39 வயதான ப்ர்ஹான் அக்தர் (Farhan Akhtar) மில்கா சிங்காக பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவரே ஒரு திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்பதும் கூடுதலாக இந்தித் திரையுலகப் பிரபலம் ஜாவேத் அக்தரின் புதல்வர் என்பதும் கூடுதல் செய்திகள்.
பிரிவினை, தேசபத்தி, சாதனை, காதல் என வணிக மசாலாக்கள் தூக்கலாக அமைந்த, தொழில்நுட்ப நேர்த்திமிக்க இந்தப்படத்தை இந்தி ரசிகர்கள் கைவிடமாட்டார்கள். 30கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல்வார வசூல் 50கோடியைத் தாண்டிவிட்டதாக வரும் செய்திகள் இதை உணர்த்துகின்றன.
– இரா.பிரபாகர்.(http://prabahar1964.blogspot.in)