the-laya-project-documentary

இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, மியான்மர், மாலத்தீவு, இந்தியா ஆகிய நாடுகளில் 2004 இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமங்களின் காட்சிப் பதிவுகளோடு அந்த மக்களின் பாரம்பரிய இசைகளை வெளிப்படுத்தும் காட்சியும் இசையும் இணைந்த  பயணம்தான் லயா புராஜக்ட்.  சர்வதேச இசை ஆர்வலர்கள் கலைஞர்கள் இணைந்து தொண்மையான சமூகங்களின் மரபான இசை வடிவங்களை சமகால ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த நவீன எலக்ரானிக் இசைவடிவங்களை குறைந்த அளவில் இணைத்து வழங்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் நாட்டுப்புற/ மரபிசைப் பாடகர்களை ஒலிப்பதிவு அரங்குகளுக்குள் நிகழ்த்தச் செய்வதற்குப் பதிலாக ஸ்டுடியோவை அவர்களிருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று பதிவு செய்திருக்கிறார்கள். இப்போதைய ஒலிப்பதிவுத் தொழில்நுட்ப வசதியால்தான் இத்தகைய நடமாடும் ஒலிப்பதிவுக் கூடங்கள் (Mobile Studios) சாத்தியமாகியிருக்கின்றன. மரபுக் கலைஞர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களின் பழக்கப்பட்ட சூழலிலேயே குரல்களைப் பதிவுசெய்து பின் அவற்றை ஸ்டுடியோவில் வைத்து ஒலிக்கலவை செய்து இசைத்தொகுப்பாக மாற்றியிருக்கிறார்கள்.
இத்தொகுப்பு கேட்கவும் பார்க்கவுமான ஒரு தொகுப்பு. நிகழ்த்துபவர்களையும் அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும் சுற்றுச்சூழலையும் இசையோடு இணைத்துக்கொள்ளும் போது நிச்சயமாக வேறு ஒரு இசை அனுபவத்தைப் பெறமுடிகிறது. http://www.youtube.com/watch?v=DJ6NR97GvWg&list=PLFA4EA1963144A72D

வணிகமயமான திரைப்பட இசை, பாப் இசைக்கு மத்தியில் நாட்டுப்புற, மரபிசையின் எளிமையும் அழகும் அற்புதமான உணர்வுகளை எழுப்புகின்றன. இருகுரலிசையில் வரும் மியான்மர் பெண்களின் பாடலும் அடர்ந்த வனச்சூழலில் தனித்து ஒரு பெண்பாடும் பாடலும் வெறும் குரலிசையாகவே நம்மை வசீகரிக்கும். மரபிசையின் மணமும், சாயலும் மாறாத அளவிரற்குக் குறைந்தளவிலான பக்க இசையை இணைத்திருக்கிறார்கள். இந்தோனேசியாவின் இளையோர் குழு வட்டமாக அமர்ந்தவாறு தாளமிட்டவாறு பாடும் பாடல் காணக் கிடைக்காதது. (http://www.youtube.com/watch?v=gbNU3wFYK8s)
இதில் தமிழகத்தை பிரதிபலிக்கும் மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. நாகூரைச் சார்ந்த இஸ்லாமிய மரபிசைப்பாடலான ‘சமதானவனே லா அல்லா’ எனும் பாடல் அற்புதமான காட்சிகளோடு அமைந்திருக்கிறது. (http://www.youtube.com/watch?v=IRbe-UqeEzU&list=PL796122D9D363B0D8)  

 இன்னெரு பாடலான ‘ஐலசா’ என்ற பாடலை பேராசிரியர் டாக்டர் குணசேகரன் மற்றும் பால்ஜேக்கப் குழுவினர் இசைக்கின்றனர். இதில் வீணை, வயலின், தபலா, தவில் என்று எல்லாவற்றையும் கலந்துகட்டி ஒரு செயற்கையான மெல்லிசைப் பாடலை தமிழ் இசையாக வழங்கியுள்ளனர். அது மரபிசையாகவும் இல்லாமல், நாட்டுப்புற இசையாகவும் இல்லாமல் இருக்கிறது. இத்தனைக்கும் குணசேகரன் நாட்டுப்புறப் பாடல்களை தனித்துவமாகப் பாடக்கூடியவர்.
உங்களுக்கு திரைப்பட இசை தவிர்த்து மற்றவகையான இசைவகைகளை ரசிக்கமுடியுமென்றால் இதை முயற்சித்துப் பார்க்கலாம்.   இந்தக் குரல் பதிவுகளைக் கொண்டு உருவாக்கியுள்ள ரீ-மிக்ஸ் வடிவங்களும் சுவாரஸ்யமானவை. (http://www.youtube.com/watch?v=iyTGci1VgCk&list=PLD202905032FD6F65)
நியூயார்க் இன்டர்நேசனல் இன்டிபென்டன்ட் பிலிம்ஸ் அன்ட் வீடியோஸ் பெஸ்டிவல் உட்பட பல விருதுகளை வென்றுள்ள இப்படம் 2007ல் வெளிவந்தது.

-இரா.பிரபாகர் (http://prabahar1964.blogspot.in)
(எர்த் சின்க்(Earth Sync) சென்னையிலுள்ள ஒரு ஆடியோ நிறுவனம்.  இந்நிறுவனத்தின் இசை-பட முயற்சியாக 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆறு நாடுகளுக்கும் பயணம் செய்து அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் இசை மற்றும் குரலின் வழியாக அவர்களை அடையாளப்படுத்துவது போல ஒரு டாக்குமெண்டரி படம் தயாரிக்கப்பட்டதுவே லயா ப்ராஜக்ட். சுனாமி பற்றி பெரிய அளவிலான தகவல்கள் இல்லாதிருப்பினும் இசையால் எல்லா கடலோரக் கிராமத்து மக்களையும் இணைப்பதாக இந்த டாக்குமெண்டரி அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.)
http://en.wikipedia.org/wiki/Laya_Project

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.