கடந்த 9 ஆம் தேதியே ரீலீஸாகும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட விஜய் அண்ட் விஜய்யின் தலைவா படம் சில பல காரணங்களால் ரிலீஸாகாமல் நின்று போயிருக்கிறது.
படம் தமிழ்நாட்டைத் தவிர உலகமெங்கும் எல்லா இடங்களிலும் ரிலீஸாகியிருக்கிறது. தேவர் மகன், நாயகன் போன்ற தமிழ்ப் படங்களை உல்டா செய்து தலைவாவாக்கியிருக்கிறார் உல்டா மன்னன் இயக்குனர் விஜய். படத்தின் கதையாகப்பட்டது என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் அதாவது குடிக்கிற வாட்டர் பிஸினஸ் செய்து வரும் விஜய் சைடு பிஸினெஸ்ஸாக டான்ஸ் ஆடுகிறார். அவரது அப்பா சத்யராஜ் மும்பையில் மற்றுமொரு நாயகன் கமல். அவர் திடீரென்று பிரச்சனைக்குள் சிக்க மகன் விஜய் அவரை வந்து பார்த்தவர் அடுத்த தலைவாவாக மாறி வில்லனைப் புரட்டி எடுத்து வெற்றி பெறுகிறார். நடு நடுவுல கொஞ்சம் மானே தேனே பொன்மானேன்னு அமலா பால், சந்தானத்தை வைத்து போட்டிருக்கிறார்கள்.
படத்தின் பிரச்சனைகள் பல. அதில் முதலாவது திருநெல்வேலியைச் சேர்ந்த கர்ணனின் தாத்தா கந்தசாமி, கொள்ளுத் தாத்தா ராமசாமி ஆகியோரின் வாழ்க்கையை இப்படம் பிரதிபலிப்பது போல்(?) இருக்கிறது என்று கர்ணன் கேஸ் போட்டு தடை வாங்கியிருக்கிறார்.
இது போக படத்துக்கு யு ஸர்டிபிகேட் தந்த சென்சார் போர்டு ஆனால் படத்துக்கு வரிவிலக்கு தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இதனால் ரொம்ப சோகமாகிப் போன தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இதை எதுக்கு ரிலீஸ் பண்ணணனு்ம் என்று டென்ஸனாகினார்களாம். ஆமா பின்னே ரசிகர்கள் கூட்டம் கட்டி ஏறும் ஒரு வாரத்திலேயே நாளைக்கு 6 ஷோக்கள் போட்டு, இஷ்டத்துக்கு டிக்கட் விலை விற்று, கல்லா கட்டுவது பத்தாதென்று அதில் அரசுக்கு வரி கூட தரக்கூடாது என்று நினைத்த அவர்கள் ஆசையில் மண்.
இது போதாதென்று படத்தில் அறிஞர் அண்ணாவை நினைவுபடுத்துவது போல சத்யராஜை ஊர் மக்கள் அண்ணா.. அண்ணாவென்றே அழைக்கிறார்களாம். நடுவில் ‘சொந்த அம்மாவைப் பாருடா அப்புறம் மத்த அம்மாவைப் பாக்கலாம்’, ‘உன்னை மாதிரி ஆடிக்கிட்டு இருந்தவங்கதான் இன்னைக்கு முதலமைச்சரா வந்திருக்காங்க.. நீயும் நல்லா டான்ஸ் ஆடுற. அதனால் நீயும் பின்னாடி முதலமைச்சரா வருவே’ என்பது போன்ற கடுப்பேத்துறாங்க மை லார்ட் டயலாக்குகள்.
சந்திரசேகர் ஏற்கனவே நான் இன்னொரு அண்ணா என்கிற ரீதியில் பேசி பிரச்சனையை கிளப்பியவர். இப்போது தன் மகன் விஜய் படத்தின் மூலமாகவும் இப்படி வம்பிழுத்ததால் அம்மா அவர்களை மீட் பண்ண டயம் தரவே இல்லையாம்.
இத்தோடு ‘ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை’ என்னும் அமைப்பு படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வைப்போம் என்று மிரட்டல் விட்டிருக்கிறார்கள். அவர்களின் உண்மையான கோபம் என்ன அது இன்னும் தெளிவாகவில்லை. இப்படியெல்லாம் குண்டு வைக்குமளவுக்கு தமிழ் மாணவர்களுக்கு அரசியல் அறிவும், தீவிர உணர்வும் இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் காலேஜ் பெஸ்ட், மானாட மயிலாட, ஜூப்பர் ஜிங்கர்கள், குத்தாட்ட பாட்டுக்களைத் தாண்டி வந்துவிட்டார்கள் என்பதே நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
இப்படி இவ்வளவு பிரச்சனைகளுக்குள் வந்து வசமாக மாட்டிக் கொண்ட தலைவா எல்லாத் தலைவலிகளும் ஓய்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ரிலீஸாகும் என்பது எதிர்பார்ப்பு. இதெல்லாம் படத்தைப் பார்ப்பதற்கு முன் வந்த பிரச்சனைகள் தான். படத்தைப் பார்த்தபின் உங்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு எந்தத் தடையுத்தரவும் பிறப்பிக்க வழியில்லை. பாத்துக்கோங்க.