கவின் நடித்திருக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார்.
இந்தப் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
மாஸ்க் படத்தின் பணிகள் பூஜையுடன் 2024 மே மாதம் 17 ஆம் தொடங்கியது.அம்மாத இறுதியிலேயே அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.
அதன்பின் விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பரிலேயே முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டது.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பிறகு, தயாரிப்பாளர் என்கிற முறையில் படத்தைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.அவர் பார்த்துவிட்டு படத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.அதோடு எந்தெந்த மாதிரியான காட்சிகள் எடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.அதோடு அவரே படப்பிடிப்பில் கலந்து கொண்டு வழிகாட்டியிருக்கிறார்.
இப்போது எல்லா வேலைகளும் நிறைவடைந்துவிட்டது. நவம்பர் 21 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.நேற்று இந்தப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரமும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 தமிழ் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் வெளிநாட்டு விநியோக உரிமையை யாஹியா பாய் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றில், இணைய ஒளிபரப்பு உரிமை சுமார் ஆறு கோடிக்கும் வெளிநாட்டு விநியோக உரிமை சுமார் ஒரு கோடிக்கும் விற்பனை ஆகியிருக்கிறதாம்.
இவை தவிர பாடல் உரிமை சுமார் நான்கு கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை திருச்சியைச் சேர்ந்த சுப்பு பெற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அதன்விலை சுமார் ஆறு கோடி.எம்ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் இவ்வியாபாரம் நடந்திருக்கிறதாம்.இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன என்றும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதோடு, கேரளா,கர்நாடகா உரிமைகள் தலா சுமார் 25 இலட்சத்துக்கும் ஆந்திரா உரிமை சுமார் ஐம்பது இலட்சத்துக்கும் முடிவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இன்னமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆகவில்லை.அது சுமார் மூன்று கோடி வரை போக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஆக மொத்தம் சுமார் 21 கோடிக்கு மொத்த வியாபாரம் இருப்பதால் படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது என்கிறார்கள்.
