நடுத்தரக் குடும்ப ஆண்களுக்கு எப்போதும் பணம் ஒரு பெரிய பிரச்சினை.அதிலும் ஆடம்பரவாழ்க்கைக்கு அல்லது மற்றவர் பெருமைக்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற மனைவி அமைந்துவிட்டால் அவன் கதி அதோகதிதான்.இதையே கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்தான் மிடில்கிளாஸ்.
முனீஸ்காந்தும் விஜயலட்சுமியும் கணவன் மனைவி.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.முனிஸ்காந்த்துக்கு கிராமத்தில் இரண்டு ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமியோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.விஜயலட்சுமி தனது எண்ணத்தை அதட்டலுடன் வெளிப்படுத்தினாலும் முனிஸ்காந்த் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படிச் சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அது என்ன? என்பதுதான் திரைக்கதை.
நடுத்தரக் குடும்பத் தலைவர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் முனீஸ்காந்த்.அதிலிருந்து மீள ஒருவழி கிடைத்தும் அதை நழுவவிட்டுவிட்டு அவர் படும்பாடு இரசிக்கவும் வருந்தவும் வைக்கின்றன.
நடுத்தரக் குடும்பத் தலைவியாக நடித்திருக்கும் விஜய்லட்சுமிக்கு இது வாழ்நாள் படமென்று சொல்லலாம்.அந்தளவுக்கு வேடத்தை உணர்ந்து நடித்து பெரும் வரவேற்புப் பெறுகிறார்.
துப்பறிவாளராக நடித்திருக்கும் ராதாரவி, முனீஸ்காந்த்தின் தந்தையாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, தானி ஓட்டுநராக வரும் குரோஷி,காளி வெங்கட் உள்ளிட்ட அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பிரணவ் முனிராஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் கதைக்களத்தின் தன்மையையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தைப் பின் தொடர்ந்து பார்த்த உணர்வு கிடைக்கிறது.
கொஞ்சம் பிசகினாலும் தொலைக்காட்சி நெடுந்தொடர் ஆகிவிடக்கூடிய அபாயத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழவேண்டும், முடிந்தளவு பிறர்க்கு உதவவேண்டும் என்கிற உயரிய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் முத்துராமலிங்கம்.
– இளையவன்

