ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என எவராகினும் அவர்களுடைய கைரேகைகள் மாறுபட்டுத்தான் இருக்கும்.ஒரேமாதிரியான கைரேகை நான்கு பேருக்கு இருந்தால்? என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் ரேகை,விறுவிறுப்பான 6 பகுதிகள் கொண்ட இணையத் தொடராக விரிந்திருக்கிறது.

புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த இணையத் தொடரில், ஒரேமாதிரி கைரேகை கொண்ட நான்கு பேர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள்.அவர்களுக்கு கைரேகை எப்படி ஒரேமாதிரி இருக்கிறது? அவர்கள் மரணம் நிகழ்ந்தது எப்படி? என்கிற காவல்துறை விசாரணைதான் தொடர்.

கதையின் நாயகனாக காவல்துறை உதவிஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கும் பாலாஹசன்,அந்த வேடத்துக்குரிய மிடுக்கும் துடிப்பும் கொண்டிருக்கிறார்.வேகத்தோடு விவேகத்தையும் நடிப்பில் வெளிப்படுத்தி அந்த வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

காவலராக நடித்திருக்கும் பவித்ராஜனனி கதையின் நாயகியாக இருக்கிறார்.ஏனெனில் அவர் நாயகனைக் காதலிக்கிறார்.காதல் கடமை ஆகியனவற்றிற்கேற்ப நடித்திருக்கிறார்.

வினோதினிக்கு முக்கிய வேடம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.அவருடைய வேடம் தொடரின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம்.ஹெண்ட்ரி, திரைக்கதையில் இருக்கும் திடுக்கிடல்களைக் காட்சிகளிலும் காட்டி,நிஜ நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறார்.

இதுபோன்ற புலன்விசாரணைக் கதைகளுக்கு பின்னணி இசை மிகமிக முக்கியம்.அது சரியாக அமைந்தால் காட்சிகளின் தன்மை பலம்பெறும். ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்பின் பின்னணி இசை அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் துரை பிரகாஷ், ஒரு பகுதியை மட்டும் பார்த்தாலும் புரியும் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்தாலும் நிறையும் என்கிற மாதிரி தொகுத்திருக்கிறார்.

எம்.தினகரன் இயக்கியிருக்கிறார்.எழுத்தின் வலிமையைத் திரையில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.கொலை என்றதும் இரத்தம் நிறைந்த கோரங்களாகக் காட்சிப்படுத்தாமல் அதை உணர வைத்திருக்கிறார்.ஆறு பகுதிகளையும் வேகமும் விறுவிறுப்பும் குறையாமல் கொண்டு சென்று ஒரேமூச்சில் மொத்தத்தையும் பார்த்துவிட வேண்டும் என்கிற உணர்வைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருப்பது அவருடைய பலம்.

– இளையவன்

குறிப்பு – இந்த இணையத் தொடர் ஜீ 5 தமிழ் இணையத்தில் இன்றுமுதல் காணக்கிடைக்கிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.