எத்தனையோ இளைஞர் அமைப்புக்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் வாலிபர் சங்கம் என்கிற பெயர் கொண்டது கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்கிற அமைப்பு. மிகப் பாரம்பரியம் கொண்ட இந்த வாலிபர் சங்கம் மாணவர்களுக்குள்ளே அரசியல் அறிவும் சமூக விழிப்புணர்வும் ஏற்பட மிக முக்கியமானதாக இருந்துவருகிறது. மற்றபடி சாதி சங்கங்களைச் சேர்ந்த இளைஞரணி அமைப்புக்களின் ரவுடி இளைஞர்களைப் பற்றி நாம் நன்கறிவோம்.
சிவகார்த்தியும், பரோட்டா சூரியும் தான் படத்தில் வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர். இருவரும் வெட்டி ஆபிஸர்கள். ஆகவே வெட்டி ஆபிஸர்கள் செய்யும் திண்ணையில் தூங்குவது, பஸ் ஸ்டாப்பில் வந்து பிகர் கரெக்ட் பண்ணுவது போன்ற எல்லா வெட்டித்தனங்களையும் சிலுக்குவார்பட்டியில் செய்து மகிழ்கிறார்கள்.
சி.கா.வுக்கு ஸ்கூல் டீச்சர் பிந்து மாதவியின் மேல் காதல். லவ் லெட்டர் கொடுக்க அந்த ஸ்கூலிலேயே பத்தாவது படிக்கும் மாணவி ஸ்ரீதிவ்யாவைப் பிடித்து லட்டர்கள் கொடுத்தனுப்புகிறார். பின்பு காதல் திசைமாறி ஸ்ரீதிவ்யாவையே காதலிக்க ஆரம்பிக்க பிரச்சனை அவளது அப்பா சிவணான்டி என்கிற சத்யராஜால் வருகிறது. கிராமத்திலேயே மிகப் பெரிய தலைக்கட்டான அவர் காதலித்த தன் மகளையும், சி.காவையும் விட்டு வைத்தாரா அல்லது ஊர் சந்தேகப்பட்டபடி அவர்களை துண்டுதுண்டாக வெட்டிப் போட்டாரா? என்பது முடிவு. காமெடி படத்தில் இப்படி சீரியசா வருமா ?
படத்தின் தலைப்பிலேயே காமெடி படம் அதனால சீரியஸா எதிர்பார்க்காதீங்க பாஸ் என்று சொல்லிவிட்டதால் பெரிய லாஜிக் எதிர்பார்ப்பு இல்லை. விலா நோகும் காமெடிச் சிரிப்பு படத்தில் இல்லை தான். ஆனால் பாஸ் எ பாஸ், ஓ.கே.ஓ.கே என்று எம்.ராஜேஸ் டைப் படங்களில் வரும் காமெடியான சூழல் படம் முழுதும் இருக்கிறது. தனது சிஷ்யன் பொன்ராஜூக்காக ராஜேஸே வசனங்கள் எழுதியிருக்கிறார். இந்த மாதிரித் தொனியில் கதை சொல்வதில் ஒரு வசதி என்னவெனில் ரொம்ப சீரியசான விஷயங்களை காமெடி போல சரக்கென்று ஊசியில் ஏற்றிவிடலாம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் ரீட்டாவின் ஆட்டம், பஸ்ஸ்டாப் கூட்டம், திண்ணைத் தூக்கம், டீக்கடையில் பாக்கி, அலப்பறை என்று பொழுதைக் கழிக்கும் கழிசடைகளாக இருந்தாலும் போகிற போக்கில் குழந்தைத் திருமணத்தை நிறுத்துபவர்களாகவும், மணல் கொள்ளையைத் தடுப்பவர்களாகவும், கிணற்றில் விழுந்த மாட்டை பயர் சர்வீஸூக்குப் போன் பண்ணி விடாமுயற்சியுடன் மீட்பவர்களாகவும் வந்து ஹீரோயின் மற்றும் மக்கள் மனதில் நின்றுகொள்கின்றனர்.
படத்தின் முக்கிய பாத்திரங்களான சிவகார்த்திகேயனும், ஸ்ரீதிவ்யாவும் படத்துக்கு நல்ல ப்ளஸ் பாய்ண்ட். இருவருமே நடிப்பில் குறை வைக்கவில்லை. ஸ்ரீதிவ்யா தமிழுக்கு வந்திருக்கும் புதிய இளம் தென்றல். இவர்களுக்கே இளைஞ இளைஞிகள் தியேட்டரில் கூடுவது நடக்கும். இயக்குனர் பொன்ராஜ் சகலவித மசாலா அயிட்டங்களையும் சேர்த்து ஒரு காமெடி சமையல் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு சபாஷ் மற்றும் அடுத்த படம் கியாரண்டி.
படத்தின் அடுத்த ப்ளஸ் பாய்ண்ட் இசை. இமான். இமானுடைய இதமான இசையைப் பார்க்கும்போது அவருள் ஒளிந்திருந்த இசைக்கலைஞர் கும்கியிலிருந்து வெளிப்படத்துவங்கிவிட்டார் என்பது போலத் தோன்றுகிறது. பாக்காதே பாக்காதே என்ற மெலடியும் மற்றும் இரண்டு டப்பாங்குத்துக்களும் அதில் ஒன்றை சி.காவே பாடவைத்திருப்பதும் என்று காமெடிப் படத்தின் மணத்தை மெருகேற்றியிருக்கிறார். பாலசுப்ரமணியெம் இதமாக ஒளிப்பதிவியிருக்கிறார்.
சத்யராஜ் காமெடி கம் வில்லன் வேலையை அனாயசமாகச் செய்திருக்கிறார். அவரைச் சுற்றி நிற்கும் அந்த நான்கு கைத்தடிகளும் அவர்கள் படம் முழுவதும் பேசும் டயலாக்குகளும்… நல்ல நையாண்டி. போஸ் பாண்டி, லதா பாண்டியின் காதலை சாதீயக் காதலாக காட்டி சத்யராஜின் வில்லத்தனம் அதன் பிண்ணனியில் இருந்திருந்தால் படத்தின் கதைக்கு ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும். அதைச் செய்யத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
மற்றபடி இளைஞர்கள் முதல், சாதிய சங்கத்தினர் வரை யாரையும் கவனமாக நோகடிக்காமல் எந்த அரசியலுக்குள்ளும் சிக்கிவிடாமல் சிரித்தபடியே நழுவிச் செல்லும், தில்லு திராணி இல்லாத இவிய்ங்க வருத்தப்படாத வாலிபப் பசஙகதான். ஜாலியா பாத்துட்டு வாங்க.