உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிஷோர்,அவர் பணியாற்றும் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் அவரது மனைவி சுபத்ரா ராபர்ட்,மகன் ஜஸ்வந்த் மணிகண்டன், மகள் தனன்யா வர்சினி ஆகியோரைக் கொண்ட அழகிய குடும்பம்.

நல்ல பணியில் இருந்தாலும் கிஷோருக்கு இசைத்துறையில் ஆர்வம்.தொலைக்காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு முன்னேற முயல்கிறார்.அதில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில்லை. இந்நிலையில் மகன் சம்பாத்தியத்துக்கு வருகிறார்.அதன்பின் பல குடும்பத்தில் பல உணர்வுப் போராட்டங்கள்.அவை என்னென்ன? அவற்றின் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை உணர்ச்சியமயமாகச் சொல்லியிருக்கும் படம் மெல்லிசை.

அன்பான குடும்பத்தலைவர்,பொறுப்பான தந்தை, இசையை உயிரெனக் கருத்தும் மெல்லியதயத்துக்காரர்,வளர்த்த கடா மார்பில் பாயும்போது தாங்கும் சுமைதாங்கி ஆகிய பல்வேறு வகைப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடமேற்றிருக்கிறார் கிஷோர்.படத்தில் அவர் சிரிக்கும்போது நாமும் சிரிக்கலாம்.அழும்போது கலங்கி நிற்கவேண்டும்.அப்படி நடித்திருக்கிறார்.

கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் சிறப்பு.அவருடைய தோற்றப் பொலிவு ஈர்க்கிறது.இப்படி ஒரு மனைவி அமையவேண்டும் எனுமளவு அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கின்றன.

மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், தலைமுறை இடைவெளிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள்.அவற்றில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

வெளிப்புறக் காட்சிகளை மட்டுமின்றி கதாபாத்திரங்களின் அகவுணர்வுகளையும் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி.

சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார்.இசையை தலைப்பிலேயே வைத்திருக்கும் படம் என்பதால் அவருக்குக் கூடுதல் பொறுப்பு.அதை உணர்ந்து உழைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் திரவ், உள்ளுணர்வுகள், பந்த பாசங்கள், இயலாமை,ஏக்கம் ஆகிய எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய ஓர் எளிய மனிதரின் வாழ்க்கைப் பயணத்தை மையக்கதையாக வைத்துக் கொண்டு அதற்கு, மாறுபட்ட வகையில் திரைக்கதை அமைத்து படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்.

தலைப்பில் இருக்கும் மென்மை படத்திலும் இசைந்து படத்தோடு நம்மை இணங்க வைத்திருக்கிற்து.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.