காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

என்று பாடினார் பாரதியார். அந்த காதல் வலியை காட்சிகளில் விவரிக்கும் விதமாக வந்திருக்கும் படம் பூக்கி.சமூக ஊடகங்களின் விளைச்சல் இந்த பூக்கி எனும் சொல்.காதலைக் குறிக்கும் இச்சொல் இப்படத்துக்குப் பொருத்தம்.

காதல் இணையரான நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா ஆகியோர் ஒருகட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிகிறார்கள்.அந்தப் பிரிவைத் தாங்கவியலாமல் அவ்விணையர் செய்யும் செயல்களும் அவற்றின் விளைவுகளும்தாம் படம்.

காதலனாக நடித்திருக்கும் நாயகன் அஜய் திஷனுக்கு,காதல் உணர்வுகள், பிரிவின் கொடும்வலி, தந்தை பாசம் உட்பட பல்வேறு அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அமைந்திருக்கிறது.அதற்குத் தக்க நடித்திருப்பது அவருக்கும் படத்துக்கும் பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.

நாயகி தனுஷா, நாயகனுக்கு இணையான வேடமேற்று அதேபோல் நடிப்பிலும் அவருக்கு இணையாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.நடனத்திலும் ஈர்க்கிறார்.முறையாகப் பயன்படுத்தினால் பெரிதாக வலம்வரக் கூடியவராகத் தெரிகிறார்.

லக்‌ஷ்மி மஞ்சு, பாண்டியராஜன்,சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, எம்.ஜே.ஶ்ரீராம்,அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் ஏற்றுக் கொண்ட வேடங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு இசை மற்றும் படத்தொகுப்பு ஆகியனவற்றை விஜய் ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.படத்தொகுப்பாளராக முதல்பாதியில் சறுக்கினாலும் இரண்டாம்பாதியில் நிமிர்ந்து நின்றுவிடுகிறார்.

கேட்டு இரசிக்கும் வகையிலான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.திரைக்கதையின் பங்காகவே பின்னணி இசை அமைந்திருக்கிறது எனுமளவுக்கு ஊன்றிப் பணியாற்றியிருக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதியிருக்கும் புதியபரிதி, இக்கால இளையதலைமுறையின் எண்ணவோட்டங்களைக் கூர்ந்து கவனித்து அவற்றை எழுத்தாய் பிரதிபலித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் கணேஷ் சந்திரா.முழுமையாகப் பார்க்கும் நேரத்தில் சில பல குறைகள் இருக்கின்றன என்பது பலவீனம்.அதேநேரம், எக்காலத்திலும் உயிர்ப்புடனிருக்கும் காதல் உணர்வுகளின் இக்கால நிலை என்ன என்பதைக் காட்சிகளாகப் பதிவு செய்திருப்பதும் பார்ப்போர் மனதில் பதிய வைத்திருப்பதும் அவருடைய பலம்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.