லெஜெண்ட் சரவணன் நடிக்கும் லீடர் திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார்.ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா,லால்,பிரபாகர்,அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கியவேடங்களில் நடிக்கின்றனர்.

தூத்துக்குடி,ஜெய்ப்பூர்,ஊட்டி,ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பலஇடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் வைபோதாவின் இசை, ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு,பிரதீப் இ.ராகவின் படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் சண்டைக்காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ உருவாகியுள்ளது.

இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு மார்ச் 29 அன்று லீலா பேலசில்‌ நடைபெற்றது.

நிகழ்வில் பாடலாசிரியர் விவேகா பேசுகையில்….

இந்த இசைநிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்துவிட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன்,இரண்டும் அற்புதமான அனுபவங்கள்.இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்லவேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா,இல்லையென்றால் வைரல் ஆவதைதான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.சமீபத்தில் ஒருநிகழ்வில் கலந்துகொண்டபோது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது “எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார்,எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்லவேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையைவிட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்,அதை நான் பின்பற்றுகிறேன்,அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்,” என்றார்.இதுதான் வியாபாரஉலகின் பைபிள். அந்தகருத்தை அவர் சொன்னதும் மிகப்பெரிய அளவில் வைரலானது.அதுதான் அவர் வெற்றியின் இரகசியம்,இப்படம் மிகப்பெரும் வெற்றிபெற என் வாழ்த்துகள் என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசுகையில்…

நான் இன்று இந்தமேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார்தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒருபாடலை எழுதி இருக்கிறேன்.நான்குபேர் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிற,நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர்தான்.ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர்தான்.நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்துகொண்டு.திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம்,எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. “உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர்,என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர்,ஏனென்றால் நீங்கள்தான் உண்மையான லீடர்…” லீடர் -கண்டிப்பாக வின்னர் என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில்,

லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர்தான்.‌பலகதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும்போது தெரிந்து கொண்டேன்.பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்.அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார்,அந்தகதையில் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார்படுத்திக் கொள்வேன் என்று சொன்னார்.அப்போது அவரை அழைத்துக்கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அதுபோன்ற ஒருபடத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன்.அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில்,

லெஜெண்ட் சரவணனின் முதல்படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது.அவரது அடுத்தபடம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.எங்கள் நிறுவனத்தில் ‘பட்டாசு’ படத்தை இயக்கிய துரைசெந்தில்குமார்தான் லீடர் படத்தை இயக்குகிறார்,அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும்,வெற்றிவிழாவில் சந்திப்போம் என்றார்.

YouTube player

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,

இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் இரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாகதான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவிஇயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன்.அந்தகாலத்தில் உதவிஇயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள்.அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம்.நூறுரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒருசட்டையை விற்பனை செய்வார்கள்.நூறுரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்துவிட்டு வருவோம்,ஒருமுறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம்.அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்கமுடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும்தான் முடியும். அந்ததருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது.பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது.அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார்.நூறுரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரேமரியாதைதான் வழங்கினார்,இலட்சரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதைதான் வழங்கினார்,வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார்.அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
அதேபோல் இந்தபடம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரைசெந்தில்குமாருக்கு போன் செய்தேன்.அவர் என்னுடைய மிகநெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப்படமாக இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.‌ அதன்பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குந‌ர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.
நேர்மை,குறைந்த லாபம்,நிறைய வாடிக்கையாளர்கள்… இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம்.சினிமாவில் சின்னபட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப்போல்,உங்கள் அப்பா வணிகதுறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதேபோல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும்.50 அல்ல 100 படங்கள்கூட எடுத்திடவேண்டும், தயாரித்திடவேண்டும்,சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்கவேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில்,

லெஜண்ட் சரவணன் சார்,நீங்கள் வணிகஉலகத்தில் மட்டும் அல்ல,இப்போது தமிழ்சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.’லீடர்’ என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது.வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள்,அதேஉறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.குறிப்பாக,இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும். அதுபோல இந்த ‘லீடர்’ படமும் பெரிய வெற்றிபெறும். இந்தப்படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா-மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத்தொடும்.’தெறி’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம்.அதுபோல, ‘லீடர்’ படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணிஇசையும் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது.மேலும்,இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில்முருகன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.சரவணன் சார்,உங்கள் சினிமாபயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமானபடங்களை வழங்கவேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. ‘லீடர்’ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில்,

லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள்தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட்சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமரவைத்து “நிறையபடங்களில் நடிக்கவேண்டும், நன்றாக நடிக்கவேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்கவேண்டும்” என்று ஒவ்வொருமுறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்.நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.
இந்தப்படம் வெளியானபிறகு ஆறுமாதம்வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்லமுடியாது.ஏனெனில் இந்தப்படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன்.அதை நானாக சொல்லவில்லை இயக்குந‌ர் எழுதிக்கொடுத்ததைதான் பேசி நடித்தேன். இந்தப்படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.
உணவுகளை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர்,இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்தஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார்.அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர்முழுவதும் இவர் விருந்து படைத்தார் என்றார்.

பேபி இயல் பேசுகையில்,

இப்படத்தில் நான் சிரித்தேன்,அழுதேன்,கோபமாக இருந்தேன்,சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது.இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் பணியாற்றியவர். அவரைப்பற்றி என் அப்பா லக்கிகேமராமேன் என சொல்லிக்கொண்டே இருப்பார்.அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.
படப்பிடிப்பின்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.நாங்கள் நல்லமழையில் சிக்கிக்கொள்ளும்போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்தகாட்சி படமாக்கப்படும் போது அவர் கால்இடறி விழுந்துவிட்டார்,இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார்.அந்த ஒருநொடி எனக்கு மினிஹார்ட்அட்டாக் வந்ததுபோல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்துவிட்டது.அவருடைய பெஸ்ட்ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட்சீன்.ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச்சொன்னேன் என்றார்.

நடிகர் ஷாம் பேசுகையில்,

கருடன் படத்தை பார்த்தபிறகு என் நண்பர்களிடம் இந்தப்படத்தை இயக்கிய துரைசெந்தில்குமார் படத்தில் நடிக்கவேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன்.அந்தப்படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சிலநாட்களில் இயக்குந‌ர் துரைசெந்தில்குமாரிடமிருந்து அழைப்பு வந்தது,பிறகு சந்திப்பு நடந்தது.அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை,ஏனென்றால் தமிழ்சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குந‌ர் அவர்.அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிகதரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரைசெந்தில்குமார் முக்கியமானவர்.‌
இந்தப்படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.‌இதை இங்கு யாரும் செய்யமாட்டார்கள்.‌
எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள்,படப்பிடிப்புதளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு இரசித்திருக்கிறேன்.‌வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார்.அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார்,நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்புமூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ்சினிமாவுக்கு அவசியம் தேவை என்றார்.

நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில்,

லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்கவேண்டும் என்று இயக்குந‌ர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும்.அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார்.அப்போதெல்லாம் இந்தமனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக்கொண்டே இருப்பேன்.
யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும்.ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்கமுடியும் இது எல்லோருக்கும் வராது.‌அதனால்தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன்தான்.எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி 500- 600 கோடி வசூலிக்கும்.மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்தபடம் ஆயிரம்கோடி ரூபாயை வசூலிக்கும் என்றார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில்,

நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப்பற்றி பாராட்டி பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால்,அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர்,யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்;அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்கவருவது சாதாரண விஷயம் இல்லை.அது ஒரு பெரியசாதனை. ‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு ‘லீடர்’ என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது.இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுக்கு இது ஒரு சவாலான முயற்சிதான்.ஆனால் அவர் எப்போதும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து தரமான படங்களை உருவாக்குபவர்.இந்தப்படத்திலும் ஜிப்ரான் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இந்தபடம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்.டிரெய்லரை பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப்படத்தின் வெற்றியை முன்னரே காட்டுகிறது.படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அது உருவாக்கியுள்ளது.
இந்தப்படம் பெரும்செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும்,கதையும், சக்திவாய்ந்த அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை;அவர் நினைத்ததை சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத்துறையிலிருந்து, பல நல்லபடங்களை வழங்கி,பலருக்கும் உதவிசெய்யவேண்டும்.அவர் நீண்டநாள் ஆரோக்கியமாக இருந்து,சினிமாவிற்கு மேலும் பல சேவைகள் செய்யவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.இந்தப்படத்திற்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்,இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில்,

முதலில் இந்தப்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும்,என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.குறிப்பாக,இந்தப்படத்திற்காக இரவுபகலாக உழைத்து,பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.இந்தப்படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது.ஆனால் அதேநேரத்தில்,ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது.ஒவ்வொரு பாடலும், பின்னணிஇசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது.குறிப்பாக,இயக்குநர் துரைசெந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து,தேவையான மாற்றங்களைச் சொல்லி,அந்தப்பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார்.ஒரு சிறிய பிஜிஎம் மாற்றம் கூட எவ்வளவு பெரியபலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன்.துரைசார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர்,ஆனால் மிகவும் தீவிரமாக வேலைபார்க்கும் ஒரு இயக்குநர்.அவர் குழுவை முன்னேற்றும் விதமும்,ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்துமுடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.
லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள்.இந்தப்படத்தின் மூலம் அவர் ஒரு புதியமுகத்தை காட்டியிருக்கிறார்.ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக‌ மட்டும் அல்லாமல்,முழுமையான‌ அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒருநடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார்.இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதியஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.’லீடர்’ எனக்கு மிகவும் முக்கியமான படம்.இந்தப்படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனிதிருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும்,பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.இந்தப்படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள்.’லீடர்’ படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றிபெறும்.அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்கவேண்டும், நன்றி என்றார்.

இயக்குநர் துரைசெந்தில்குமார் பேசுகையில்,

லீடர் எனது ஆறாவதுபடம்.என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடினஉழைப்பே இந்தப்படத்தை இந்தநிலைக்கு கொண்டு வந்துள்ளது.வசனங்களில் உதவிய அருண்,நடிப்புபயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி.இந்தக்குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப்படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.
முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான்சார் பற்றி சொல்ல வேண்டும்.இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான்சார்தான்.அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது.சிலநேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார்.எங்களுக்குள் ஒரு ஆன்மீகஇணைப்பு போல இருந்தது.
ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன்.நான் ஒரு குறிப்பை காட்டியபோது,அது ஏற்கனவே ஜிப்ரான்சார் உருவாக்கிய ஆன்மிகஇசை என்று தெரியவந்தது.அந்தமாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப்படமெங்கும் இருந்தது. இந்தப்படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரியகாரணம், மிகவும் நன்றி சார்.
என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலைஇயக்குநர் துரைராஜ் இந்தப்படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர்.நல்லநண்பர்கள் கிடைப்பது ஒருவரம்.கருத்து கேட்கும்போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம்.எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட்மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி.இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்துகொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது.அந்தவகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.
நடிகர்கள் பற்றி பேசவேண்டும்.ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக்கதாபாத்திரத்தை உயர்த்தியது.சந்தோஷ் சார்,பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு.அது எனக்கு நல்லபொறுப்புணர்வை அளித்தது.ஆண்ட்ரியா மேடம்,விவேகா சார்,மோகன்ராஜ் – அனைவருக்கும் என் நன்றி.குறிப்பாக விவேகாசாருடன் பணியாற்றவேண்டும் என்ற என் ஆசை இந்தப்படத்தில் நிறைவேறியது. இந்தப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர்.உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
இறுதியாக… லெஜெண்ட் சார்.இந்தப்படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன்.பலகதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை.அந்தநேரத்தில்தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதேநேரத்தில் ‘கருடன்’ வாய்ப்பும் வந்தது.நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது,“நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்,இந்தப்படத்தை நாம்தான் செய்யப்போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப்படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்லவேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டுபோல இருக்கும். எந்தநேரத்திலும் அதே உற்சாகம்.நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.
“நமக்காக நூறுபேர் வேலை செய்கிறார்கள்;நாம் தாமதிக்கக்கூடாது” என்று அவர் சொல்வார்.அது எனக்கு ஒரு பெரியபாடமாக இருந்தது.மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள்.அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு.அவரின் ஆற்றல் ஒரு தீ போல.அந்த ஆற்றலை அவர் தனது இரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி என்றார்.

லெஜெண்ட் சரவணன் பேசுகையில்,

இந்தவிழாவில் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்ட தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி.‌ இன்றையசூழலில் போர்மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்றதன்மை நிலவிக்கொண்டிருக்கிறது இந்தப்போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான,பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
‘லெஜெண்ட்’ படத்திற்குப்பிறகு என்னுடைய இரண்டாவதுபடம் ‘லீடர்’.இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும்,மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது,அதற்குபிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரைசெந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும்,அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார்.எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு வேலை செய்கிறார்களோ அந்தவேலை அற்புதமாக அமையும், இந்தபடமும் மிகப்பிரம்மாண்டமாக இருக்கிறது.‌
இந்தபடத்தில் குத்துப்பாடல்கள் கிடையாது.ஆனால் இந்தபடத்தில் கதையுடன் பயணப்படுவதுபோல் பாடல்கள் இருக்கின்றன,அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப்பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌
இந்தபடத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா,ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி,சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது.கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம்.குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன்,ஒன்றுதான் என்றார்.உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள்,ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை.எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்கவேண்டும் என்று சொன்னேன்,ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை.பத்தாவதுநாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது,தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா,என்ற நிலை ஏற்பட்டது.என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க‌வேண்டாம்,கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது.இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்,ஆர்ட் டைரக்டர்,ஸ்டண்ட் மாஸ்டர்,நடிகர்கள்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படபிடிப்புதளத்தில் அறந்தாங்கி நிஷா,பேபி இயல், ஜார்ஜ் மரியன்,பாகுபலி பிரபாகர்,சந்தோஷ் பிரதாப், ஷாம்,லால்,அமிர்தாஐயர்,ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா,பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்கமுடியாதது.இந்தப்படத்தை பார்த்த தனுஷ்,வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்தத் திரைப்படம் ‘ஜெயிலர்’ போன்றோ அல்லது ‘விக்ரம்’ போன்றோ,’லியோ’ போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் ‘லீடர்’ படத்தில் இருக்கிறது.இரசிகர்களுக்கு மிகவும்பிடிக்கும்.வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது,குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவுதாருங்கள்,உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.‌
இந்தபடத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை.கோடைகால விடுமுறையை ‘லீடர்’ உடன் கொண்டாடுங்கள்.
“கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை,எல்லா நல்லதும் நல்லமனிதர்கள் மூலமாக தான் நடக்கும்.நாம அவங்களதான் நம்பணும்.நீங்க என்னை நம்புங்க” என இந்தப்படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது,அது எனக்கு மிகவும்பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.