நாயகன் சேத்தன் சீனு, சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபடும் ஆஸ்னா சாவேரியை பார்த்தவுடன் காதலிக்கிறார். அவரது நம்பிக்கையையும் அன்பையும் பெறுவதற்காக, அவர் மேற்கொள்ளும் சமூகப் பணிகளில் இணைந்து செயல்படுகிறார். காலப்போக்கில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

இந்நிலையில், அவர்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ச்சியாக மர்மமான கொலைகள் நடைபெறத் தொடங்குகின்றன. ஒவ்வொரு கொலையிலும், உயிரிழந்தவர்களின் உடலில் ஒரு திருக்குறள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறை அதிர்ச்சியடைகிறது. இந்தக் கொலைகளைச் செய்பவர் ஒரு சாதாரண கூலிப்படை கொலையாளி அல்ல, அவருக்குப் பின்னால் ஆழமான வேதனையும் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லும் நோக்கமும் இருப்பதை காவல்துறை கண்டுபிடிக்கிறது. அவர் யார்? அவரை இந்த பாதைக்கு தள்ளிய சம்பவம் என்ன? ஏன் திருக்குறளை தனது ஆயுதமாக பயன்படுத்துகிறார்? என்பதற்கான பதில்களே படத்தின் மையக்கரு.

சேத்தன் சீனு, ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சி காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக குடும்பத்தைச் சார்ந்த சில காட்சிகளில் அவரது நடிப்பு பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது. காதல், கோபம், வேதனை என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.நாயகியாக நடித்துள்ள ஆஸ்னா சாவேரி, தனது அழகாலும் நடிப்பாலும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். சமூக அக்கறை கொண்ட இளம் பெண்ணாக அவரது கதாபாத்திரம் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. க்ளைமாக்ஸில் இவரது நடிப்பு கைதட்டல் கொடுக்க வைத்திருக்கிறது. மறைந்த மனோபாலாவின் தோற்றம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் டப்பிங் சற்று கவனித்திருந்திருக்கலாம். சாய் தீனா, பிரேம்குமார், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, கதையின் பதற்றமான சூழல்களை அழகாக பதிவு செய்துள்ளார். குறிப்பாக விசாரணை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு தெளிவாக தெரிகிறது. அஸ்வத்தின் இசை மற்றும் பின்னணி இசை பல இடங்களில் கதையின் தாக்கத்தை அதிகரிக்கிறது.

இயக்குநர் சங்கர் சாரதி, வெறும் குற்றவியல் திரில்லரை மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வை பேசும் படைப்பாக வள்ளுவன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நீதித்துறை, காவல்துறை, அரசியல் என மக்களின் பிரச்சனைகளை களையும் துறைகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருந்தால், என்ன மாதிரியான நிகழ்வுகள், சம்பவங்கள் நடக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த படம் அமைந்திருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை யார் செய்தாலும், அது வேரோடு வெட்டப் பட வேண்டும், என்பதை அழுத்தமாக கூறியிருப்பதால் நிச்சயம் இப்படத்தை கொண்டாடலாம்..

படத்திற்கு பலமாக நின்றது:
சமூக அக்கறை கொண்ட கதைக்களம்
சேத்தன் சீனுவின் நடிப்பு
திருக்குறளை மையமாக கொண்ட வித்தியாசமான திரைக்கதைமொத்தத்தில், ஒரு சாதாரண குற்றவியல் திரில்லர் அல்ல.
சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக கேள்வி எழுப்பும், திருக்குறளின் சிந்தனைகளை நவீன பார்வையில் பதிவு செய்யும் முயற்சியாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.