வீட்டை எதிர்த்து திருமணம் செய்த கணவருடைய சொந்த ஊருக்கு அவருடன் செல்கிறார் சமந்தா.போன இடத்தில் அந்த வீட்டுக்குத் தக்க மருமகளாக நடந்து கொள்ள பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளும் அவருக்கு வெளியிலிருந்து ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் எங்கள் தங்கம்.

ஸ்வர்ணா எனும் கதாபாத்திரமேற்று அமைதியாக அறிமுகமாகும் சமந்தா,புகுந்த வீட்டுக்குப் பொருத்தமான மனையாளாக மாறிக்கொள்வதில் சந்திக்கும் சிக்கல்கள் சிரிப்பும் கும்மாளமுமாகக் கடந்து போகின்றன.அவர் மட்டும் தனியாக இருந்தால் சுவையாக இருக்காது என்பதால் கணவரின் தம்பி மனைவியையும் களத்தில் இறக்கி சமந்தாவுக்கு சவால் விடுத்திருக்கிறார்கள்.இப்படிப் போய்க்கொண்டிருக்கும் வேளையில்,திடீரென ஒருவர் வந்து நீ ஜான்சிதானே என்று கேட்ட பின்பு இன்னொரு சமந்தா வருகிறார்.அவர் சிலிர்க்க வைக்கிறார்.வியக்க வைக்கிறார்.பேருந்து நிலைய சண்டைக்காட்சி ஈர்ப்பு.

சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே,மனைவி பற்றி தெரியாமல் இருப்பதும் தெரிந்து தவிப்பதும் நன்று.

எதிர்மறை வேடமான கர்ணா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் குல்சன் தேவய்யா,அதற்கேற்ற வெறுப்புடன் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.அவரும் சமந்தாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சி கவனிக்க வைக்கும்படி அமைந்திருக்கிறது.

நம்ம ஊர் கௌதமி,ஆனந்த்,ஸ்ரீ லக்ஷ்மி,மன்ஜூஷா,சைதன்ய கிருஷ்ணா,ஸ்ரீமுகி ஆகிய மற்ற நடிகர் நடிகையரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் அமைதியான சமந்தா அதிரடியான சமந்தா ஆகிய இருவரும் வேறுபட்டுத் தெரிவது மட்டுமின்றி மற்ற காட்சிகளின் ஒளியமைப்பும் இரசிக்க வைக்கின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.அவர்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரியாமல் படம் பார்ப்பவர்களும் உணர்ந்து கொள்ளும் அளவு தன் இருப்பை பதிவு செய்திருப்பதோடு படத்துக்கும் பலமாக இருக்கிறார்.

லீ விட்டேகர்,ஏஜாஸ் குலாப்,மார்வெல் நட்ராஜ் ஆகியோர் வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் சமந்தாவுக்குப் பலம் சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

ராஜ் நிடிமொரு,வசந்த் மரிம்கண்டி ஆகியோர் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.

படத்தை இயக்கியிருக்கும் பி.வி.நந்தினிரெட்டி,பெண்ணைப் பேச பெண்ணே எழு என்கிற பாவலர் அறிவுமதியின் வரிகளுக்கேற்ப ஒரு பெண்ணின் வாழ்க்கை அதிலுள்ள சூட்சுமங்கள் அவற்றை அப்பெண் எதிர்கொள்ளும் விதம்,அதன்மூலம் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என நிறைய விசயங்களைச் சொல்லியிருக்கிறார்.

– கதிரோன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.