ஒரே ஏர்போர்ட்டில் 18 வருட ஜெயில் வாழ்க்கை… பாஸ்போர்ட் இல்லாததால் நேர்ந்த கொடுமை;
பாஸ்போர்ட், குடியுரிமை ஆகியவை எல்லாம் ஒன்றுதான் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், அவை ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்டவை.
இந்த அதிகாரத்துவ சட்ட சிக்கல்களால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 18 ஆண்டுகளை ஒரு விமான நிலையத்திற்குள்ளேயே கழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஒரே ஏர்போர்ட்டில் 18 ஆண்டுகள் வாழ்ந்த விசித்திர மனிதன்
நமக்கு 4 மணி நேரம் அல்லது 8 மணி நேரம் ஏர்போர்ட் லே-ஓவர் (Layover) இருந்தாலே பைத்தியம் பிடித்துவிடும். ஆனால், ஒரு இரவோ, ஒரு வாரமோ அல்ல.. தன் வாழ்நாளின் 18 வருடங்களை (1988 முதல் 2006 வரை) ஒரு ஏர்போர்ட் டெர்மினலுக்குள்ளேயே கழித்தவர் தான் மெஹ்ரான் கரிமி நாசேரி.
யார் இந்த மெஹ்ரான்?
நாசேரி 1945-ல் ஈரானில் பிறந்தார். பின்னர் பிரிட்டனில் படித்துவிட்டு ஐரோப்பா முழுவதும் சுற்றித் திரிந்தார். 1988-ல் அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவரது அடையாள ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் தொலைந்து போய்யுள்ளது. ஆவணங்கள் இல்லாததால் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதே சமயம், அவரை வேறு எந்த நாட்டிற்கும் திருப்பி அனுப்பவும் சட்டத்தில் இடமில்லை. இதனால் பிரான்சின் ‘சார்லஸ் டி கோல்’ (Charles de Gaulle) விமான நிலையத்தின் ‘டெர்மினல் 1’ தான் அவரது நிரந்தர முகவரியாக மாறியது.
ஒரு சிவப்பு பெஞ்ச்.. இரண்டு லக்கேஜ் ட்ராலிகள்
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக மாறின. ஏர்போர்ட் ஊழியர்கள், பயணிகள் என அனைவருக்கும் அவர் பழகிப்போனார். அங்கிருந்த ஒரு சிவப்பு நிற பெஞ்ச் தான் அவரது கட்டில். தனது உடமைகள் அனைத்தையும் இரண்டு லக்கேஜ் ட்ராலிகளில் அடுக்கி வைத்திருந்தார். தினமும் அதிகாலையில் பயணிகள் கூட்டம் வருவதற்கு முன்பே ஏர்போர்ட் கழிவறைக்குச் சென்று முகம் கழுவி, காகா குளியல் போட்டுவிடுவார்.
நாளிதழ்கள் படிப்பது, டைரி எழுதுவது, ஏர்போர்ட் ஊழியர்கள் மற்றும் பயணிகள் வாங்கித் தரும் உணவைச் சாப்பிடுவது என அவரது வாழ்க்கை அங்கேயே சுழன்றது. காலப்போக்கில் அவர் தன்னை “சர் ஆல்ஃபிரட் மெஹ்ரான்” என்று அழைக்கத் தொடங்கினார்.
விசித்திரத் திருப்புமுனை
1990-களின் இறுதியில் அவருக்குப் பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க முன்வந்தது. ஆனால், அந்த ஆவணங்களில் அவரது அசல் பெயரான மெஹ்ரான் கரிமி நாசேரி என்று இருந்ததால், “நான் நாசேரி இல்லை, நான் தான் சர் ஆல்ஃபிரட்” என்று கூறி அந்தப் பேப்பர்களில் கையெழுத்திட மறுத்து, ஏர்போர்ட்டிலேயே தொடர்ந்து வாழ முடிவெடுத்தார். ஏர்போர்ட் சூழல் அவரது மனநிலையை அப்படி மாற்றிவிட்டது.
ஹாலிவுட் எண்ட்ரி – 3 லட்சம் டாலர்
இவரது விசித்திரக் கதை உலக ஊடகங்களில் வைரலாக பரவியது. 2004-ல் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இவரது கதையை அடிப்படையாகக் கொண்டு ‘தி டெர்மினல்’ படத்தை எடுத்தார். இதற்காக நாசேரிக்கு சுமார் $250,000 முதல் $300,000 டாலர், இந்திய மதிப்பில் பல கோடிகள் ராயல்டியாக வழங்கப்பட்டது. பணம் கிடைத்த பிறகும் அவர் சொகுசு வாழ்க்கையை விரும்பாமல், ஏர்போர்ட் பெஞ்சிலேயே அமர்ந்து புத்தகங்களையும், சாப்பாட்டையும் வாங்கித் தன் காலத்தைக் கழித்தார்.
ஏர்போர்ட்டில் தொடங்கிய வாழ்க்கை, ஏர்போர்ட்டிலேயே முடிந்த சோகம்
2006-ல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு பாரிஸில் உள்ள சில காப்பகங்களில் வாழ்ந்து வந்தார். இறுதியில் 2022-ல் மரணத்தின் விளிம்பில் இருந்த நாசேரி, மீண்டும் தனக்குப் பிடித்தமான அதே சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கே திரும்பி வந்தார். அங்கு வந்த சில வாரங்களிலேயே, தனது 76-வது வயதில் மாரடைப்பால் அதே ஏர்போர்ட்டில் காலமானார்.
The Indian Express தமிழ்
https://www.facebook.com/share/p/1DGp4yJzYP/
https://www.facebook.com/share/p/1DGp4yJzYP/
