இந்தக்காலத்திலும்,கல்வி சுகாதாரம் ஆகிய அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி சொல்லியிருக்கும் படம் அருள்வான்.
ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால்,அங்குள்ள வாழ்க்கைச் சூழல், கல்வி கற்கத் தடையாக இருக்கிறது.மாவட்ட ஆட்சியருக்கு அந்தச் சூழல் பிடிபடுகிறது.அவர் அந்தச் சிறுமி உள்ளிட்ட அனைவரும் கல்வி கற்கவேண்டும் என நினைக்கிறார்.அதற்காக உழைக்கிறார்.அதில் வென்றாரா? இல்லையா? என்பதைச் சொல்வதே படம்.
நேர்மையான மாவட்ட ஆட்சியர் முத்துவேல் என்கிற கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார் அருள்நிதி.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படிக்கவேண்டும் என்று போராடும் குறிஞ்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி கிருத்திகாதான் படத்தின் நாயகி.படிப்பார்வம்,பெற்றோரைப் பிரிந்த தவிப்பு,அருள்நிதியின் ஆதரவால் கிடைக்கும் நிம்மதி ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
சிறுமி கிருத்திகாவின் பெற்றோராக நடித்திருக்கும் ஆரவ்,ரம்யாபாண்டியன் ஆகியோருக்குப் பெரிய வாய்ப்பில்லை.கிடைத்த வாய்ப்பைப் பய்ன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறார்கள்.
காளி வெங்கட்,ஜான் விஜய்,விடிவி கணேஷ் ஆகியோர் தங்கள் இயல்புக்கு மாறாக,இந்தக் கதைக்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இயற்கையைக் காட்சிப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாருக்கேற்ற கதைக்களம்.அதை வழக்கம்போல் சிறப்பாகப் படம்பிடித்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் அந்தமக்களின் வாழ்நிலையை வெளிப்படுத்தி பரிதவிக்க வைக்கிறார்.
லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.படபடவென வேகமாக ஓட்டவேண்டும் என்று எண்ணாமல் இந்தக் கதையை இப்படிக் கொண்டு சென்றால்தான் இயக்குநரின் உணர்வுகளை மக்களுக்குக் கடத்தமுடியும் என்று எண்ணி பணிபுரிந்திருக்கிறார்.
எல்லாவசதிகளும் கைக்குள் இன்னும் சொல்லப்போனால் கைபேசிக்குள் வந்துவிட்ட இக்காலத்திலும் அடிப்படை வசதிகள் கூட ஆடம்பரம் என்றெண்ணும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி அவர்களின் உரிமைகளை அவர்களுக்குக் கொடுப்பதில் அதிகார வர்க்கங்கள் காட்டும் அலட்சியம்,ஒரு நல்லெண்ணம் கொண்ட அதிகாரி வந்தால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றை இரத்தமும் சதையுமாகப் பதிவிட முயன்றிருக்கிறார் இயக்குநர் கணேஷ்விநாயகன்.
அருள்நிதியை முத்துவேல் என்கிற பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பதோடு தந்தைபெரியார் புத்தகத்தை முதன்மைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சமுதாய அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
– இளையவன்
