தமிழ் முருகன்’ வருகிறான் – இது ஒரு திரைப்பட அறிவிப்பு மட்டுமல்ல; தமிழரின் பண்பாட்டு அரசியலை காக்கும் அல்லது மீட்கும் நடவடிக்கை
நேற்று இரவு தோழர்கள் பகிர்ந்ததன் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்தேன். வெற்றிமாறன் மீது நமக்கு இருக்கும் அளப்பரிய மரியாதை காரணமாக, கதை என்ன என்பது தெரியாவிட்டாலும், இது தரமான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆனால், இந்த திரைப்படத்தின் தரத்தைவிட, அது இன்றைய அரசியல் சூழலில் “தமிழ் முருகன்” என்ற பெயருடன் வெளியாகிறது என்பதுதான் மிக முக்கியமானது.

ஏன்?
ஏனெனில், வட இந்தியாவில் இஸ்லாமியர்களை எதிரியாக காட்டி இந்துத்துவாவை வளர்த்தது போல, தமிழ்நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு என்பதை தமிழர்களிடத்தில் பரப்ப முடியவில்லை என்பதும், அதனால் இந்துத்துவாவை முழுமையாக தமிழர்களிடத்தில் புகுத்த முடியவில்லை என்பதும் ஆர் எஸ் எஸ் கலவர கும்பலுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆகவே தமிழர்கள் இடத்தில் இருந்து ஒன்றை எடுத்து அவர்களை அதனை நம்பச் செய்து அதன் மூலம் தமிழர்களை பார்ப்பன அடிமைகளாக மாற்றும் முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுதான் தமிழர்களின் திணை தலைவனான முருகனை அபகரிக்கும் இந்துத்துவ முயற்சி.
இந்த இந்துத்துவாவின் சதித் திட்டத்திற்கு தனது கூலிப்படைகளாக இருக்கும் தொல்லியல் துறை, நீதித்துறை, அரசியல் துறை என எல்லாவற்றையும் ஆர்எஸ்எஸ் பயன்படுத்தி வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் நடந்த பிரச்சனை இந்த கூலிப்படைகளில் மூலம் நடத்தப்பட்டதுதான். இதுவரை நடைமுறையில் இல்லாத ‘அளவைக் கல்லை’ தீபத்தூண் என்று சொல்லி பிரச்சனையை உருவாக்க ஆர்எஸ்எஸ் முயற்சித்த போது, தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பால் அந்தத் திட்டத்தின் சில கட்டங்கள் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது கைவிடப்பட்டுவிட்டது என்று கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
அதற்கான எடுத்துக்காட்டாக, திருச்சியை மையமாகக் கொண்டு தொல்லியல் துறையின் தலைவராக ஒன்றிய அரசின் கைப்பாவை ‘அறவாழி’ என்பவரை ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. இவர் திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் என்னும் ஆர்எஸ்எஸ் காரர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவையும், அங்கு வாழும் தமிழர்களின் வரலாற்று உரிமையையும் அகற்றும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
அதன் பின்னர் மதுரையை மதக் கலவர அரசியலின் களமாக மாற்றி, இந்துத்துவ அரசியலை வலுப்படுத்துவதற்காக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் மதுரையை சுற்றியுள்ள சாதி சங்கங்கள் களமிறங்கத் தயாராக இருக்கிறார்கள்.
மற்றொரு புறம், தமிழர்களின் திணை பண்பாட்டின் அடையாளமான முருகனை தமிழர்களிடமிருந்து பிரித்து, அவரை முழுமையாக இந்துத்துவத்தின் குறியீடாக மாற்றும் நோக்கத்தோடு, ரங்கராஜ் பாண்டே தலைமையில் முருகனைப் பற்றிய ஒரு ஆவணப்படம் தயாராகி வருகிறது. அதில் முருகன் என்பவர் தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பதும் வட இந்தியாவில் தான் தோன்றினார் என்பதையும் பொய்யான கதையின் மூலம் நிறுவ முயற்சிக்கிறார்கள்.
இதோடு சேர்ந்தது தான் சமீபத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை மையமாகக் கொண்டு உருவாகி வரும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். அதில் முருகன் வடநாட்டில் பிறந்தவர்; தென்னாட்டில் அவரை வழிபடுகின்றனர் என்ற வரலாற்று அடிப்படையற்ற கதையாடலை உருவாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.
தமிழர் திணை நாகரிகத்தின் தலைவனாக விளங்கும் முருகனை, தமிழர்களின் பண்பாட்டு மரபிலிருந்து பிரித்து, பார்ப்பனிய இந்துத்துவத்தின் அரசியல் கருவியாக மாற்றும் முயற்சிகள் தீவிரமடையும் இந்தக் காலகட்டத்தில்தான் ‘தமிழ் முருகன்’ என்ற திரைப்படம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடஇந்தியாவில் உருவாகும் முருகன் குறித்த வரலாற்றுத் திரிப்புகளை எதிர்ப்பதும், “முருகன் தமிழ் பண்பாட்டின் தலைவன்” என்பதை வரலாற்று ஆதாரங்களோடு நிறுவுவதற்காக மே 17 இயக்கம் தமிழ் அறிவர் மாநாட்டை நடத்துவதும் ஒரு அரசியல் செயற்பாடு என்றால், அதே கருத்தை மக்களிடம் திரைப்படம் என்ற ஊடகத்தின் வழியாக எடுத்துச் செல்வதும் அரசியல் தலையீடே.
அந்த வகையில், வெற்றிமாறன் தொடங்கியிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
‘தமிழ் முருகன்’ திரைப்படம் வெறும் கலைப்படைப்பாக மட்டுமல்லாமல், தமிழ் பண்பாட்டு அடையாளத்தைப் பற்றிய சமூக விவாதத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு படைப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

 

— முக நூலில், திரு கொண்டல் சாமி.

 

YouTube player

Related Images: