கோச்சடையானை ரஜினியின் மகள் ஒருவழியாக ஒப்பேற்றிவிடுவார் என்பதை கோச்சடையானுக்கு காட்டிய 10 செகண்ட் டீசரே காட்டிவிட்டது. அதில் ரஜினிகாந்த் நடந்து வரும் நடையும் அவர் திரும்பிப் பார்ப்பதும் போகோ சேனல் சீரியல்களில் வரும் 3-டி பாத்திரங்கள் அளவுக்கு மகாச் சொதப்பலான
வடிவமைப்பும், மேசமான தொழில்நுட்பம் கொண்டதாகவும் இருக்கின்றன. முழுப் படத்தையும் யாரும் பார்த்திருக்கிறார்களா? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.
பணம் போனாலும் பரவாயில்லை. ரஜினியை சுட்டி டி.வியில் வரும் ஜாக்கிசான் போல குழந்தைகள் மனதில் எப்போதும் நிறைந்திருக்கும் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரமாக்கும் ஒரு நல்ல ஐடியாவும் இதில் வீணாய்ப் போய்விடும். பெரியவர்கள் ரசிப்பதும் ரசிக்காததும் வேறு விஷயம். கோச்சடையான் யாரைக் குறிவைத்து ? குழந்தைகளையா அல்லது பெரியவர்களையா அல்லது இருவரையுமா ? என்கிற கேள்விக்குக் கூட கோச்சடையான் டீம் வசம் தெளிவான பதில் இருக்குமா என்பது சந்தேகமே.
இந்த நிலையில் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. தற்போது கோச்சடையானுக்கு அடுத்து படம் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் ரஜினிகாந்த். சாதாரணமாக நூறுகோடி ரூபாய் அளவுக்கு பிசினெஸ் ஆகும் மார்க்கெட் இருக்கிறது அவருக்கு. ஆரம்பத்தில் அவரது அடுத்து படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவார் என்கிற பேச்சு அடிபட்டது. இப்போது ஷங்கர் மீண்டும் ரஜினியை இயக்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
விக்ரம் நடிக்க ஐ படத்தை இயக்கிவரும் ஷங்கர், அது முடிந்தவுடன் ரஜினியை வைத்து இயக்குகிறார். படத்தின் கதைபற்றிதான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஷங்கர் எந்திரன் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று யோசிக்கிறார். ரஜினியோ மாறுபட்ட ஆக்ஷன்கள் மிகக் குறைவான, நல்ல கதையுள்ள படமொன்றில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மன்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.