சந்தோஷ் நாராயணனின் இசையில் இந்த வருடம் வந்திருக்கிறது இந்தக் குக்கூ. இரு பார்வையற்றவர்களின் காதலைச் சொல்லும் இந்தப் படத்திற்கு இசை முக்கியமானதாக இருக்கிறது.
பாடல்கள் அனைத்துமே மெலடியாகவே இருக்கின்றன கானாப் பாடல்கள் உட்பட. பாடகர்கள் தேர்விலும் நல்ல பொருத்தமான புதுக்குரல்கள் இடம்பெற்றுள்ளன. கானா பாடலை கானா பாலாவே எழுதி பாடியிருக்கிறார். மற்ற எல்லாப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார்.
ஆகாசத்த நான் – கல்யாணி நாயர், பிரதீப் குமார்.
வயலின் மற்றும் கீபோர்டின் இசைவில் வரும் மெலடிப் பாடல். பீட்டை வேணடுமென்றே தவிர்த்திருக்கிறார். கல்யாணி நாயர், பிரதீப் குமார் இருவரின் குரல்களும் யுகபாரதியின் வரிகளும் அருமை. ஹிட்டாகும் பாடல்.
மனசுல சூறைக் காத்தே – ஆர்.ஆர், திவ்யா ரமணி. பாடல் – யுகபாரதி
பாடல் நெடுக புல்லாங்குழலையும், கிடாரையும் மையமாகக் கொண்டு இசையமைத்திருக்கும் பாடல். அருமையான மெலடி. ஆர்ஆர் மற்றும் திவ்யா ரமணியின் குரல்கள் நன்றாக இழைகின்றன. யுகபாரதியின் பாடல்கள் வரிகளில் கண்தெரியாதவர்களின் தொடு உணர்வுகள் அவர்களது உவமைகள் என்று மெனக்கெட்டிருக்கிறார். நல்ல வரிகள்.
ஏன்டா மாப்புளே – கானா பாலா, சதீஷ். சுந்தர். பாடல் – கானா பாலா, ஆர்.கே.சுந்தர்
வழக்கம் போல வரும் ஒரு கானா பாடல். கேட்கலாம். வேகமான பீட் இல்லாமல் மெதுவாக வருகிறது. நன்றாகத் தானிருக்கிறது.
கலயாணமாம் கல்யாணம் – ஆன்டனி தாசன்.
ஆண்டனி தாசனின் குரலில் வரும் சோகப் பாடல். காதலனைக் கைவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணை நினைத்து காதலன் பாடும் பாடல். சுமார் தான். யுகபாரதியின் வரிகள் ஓ.கே.
கோடையில மழை போல – வைகோம் விஜயலட்சுமி,பிரதீப் குமார்
வெறுமனே கிடாரின் பிண்ணணியில்வைகோம் விஜயலட்சுமியின் குரல் கணீரென்று கிராமியமாக ஒலிக்கிறது. பீட்கள் எதுவும் இல்லாத மற்றொரு நல்ல மெலடி. யுகபாரதி பாடல்களில் ஸ்கோர் செய்கிறார்.
பொட்டபுள்ள – ஆர்ஆர்
கடம் மற்றும் கீபோர்டு காம்பினேஷனில் நல்ல பாட்டு. கேட்கலாம்.
மொத்தத்தில் சந்தோஷ் நாராயணணின் இசையில் பாடல்கள் வித்தியாசமாக இருக்கின்றன. படம் வெளிவந்தபின் படத்தின் காட்சிகளோடு வலுவேற்றப்படும் போது பாடல்கள் இன்னும் ஹிட்டாகலாம்.
–மருதுபாண்டி