சரியாய் அஜீத்தின் பிறந்த நாளான மே-1 ம் தேதியன்று அவரது ஸ்டைலிலேயே, துப்பாக்கி’ படத்துக்கு விஜய் சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த போஸ்டர்கள் தான் இப்போது கோடம்பாக்கம் முழுக்க புகைந்து கொண்டிருக்கின்றன.
‘எங்க தல ஸ்டைல விஜய் கொஞ்சம் கூட வெக்கமில்லாம காப்பி அடிக்கிறார்’ என்று அஜீத் ரசிகர்கள் நக்கல் செய்வது ஒருபுறமிருக்க,பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை என்று இருக்கும்போது, இவ்வளவு பெரிய நடிகர், மெகா சைஸ் போஸ்டர்களில் இப்படி போஸ் கொடுக்கலாமா/ என்று விஜயையும், இயக்குனர் முருகதாஸையும் ஆளாளுக்கு கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட ஆரம்பித்துவிட்டார்கள்.
இவ்வளவு பெரிய எதிர்ப்பை சற்றும் எதிர்பாராத முருகதாஸ்,’’ படத்தில் விஜய் புகைப்பது போல் ஒரு சிறிய காட்சி மட்டுமே இடம் பெறுவதாக இருந்தது. இப்போது அதையும் நீக்கிவிட முடிவு செய்து விட்டேன். இனி போஸ்டர்களிலும் கூட விஜய் புகைப்பது போன்ற படங்கள் இடம்பெறாது’’ என்று எதிர்ப்பாளர்களைப் பார்த்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டார்.
இந்தப்பஞ்சாயத்துகள் ஒருபுறமிருக்க,’கள்ளத்துப்பாக்கி’ படம் எடுத்துவரும் குழுவினர், ‘’எங்கள் டைட்டிலை நாங்கள் மாற்றவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, நாங்கள் போஸ்டர் ஒட்டிய மறுநாளே, எங்கள் போஸ்டர்கள் அத்தனையையும் மறைத்து ‘துப்பாக்கி’ படபோஸ்டர்களை ஒட்டிவிட்டனர்’ என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைய கவுன்சில்ல போய் பேசித்தீத்துக்கங்க. இந்த சின்ன சமாச்சாரத்துக்கெல்லாம் பட்டுன்னு துப்பாக்கிய தூக்குனா எப்பிடி?