முண்டாசுப்பட்டி படத்தில் முனீஸ்காந்த் என்கிற காமெடிப் பாத்திரத்தில் தோன்றி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார் ராமசாமி. எப்படி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது என்பது பற்றி அவரிடம் கேட்டபோது..
“பிதாமகன் படத்தில்தான் சிறியதொரு பாத்திரத்தில் நான் அறிமுகமானேன். அதற்குப் பின் ‘காளை’, ‘வெப்பம்’, ‘ஈசன்’ போன்ற பல படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் அவை அனைத்தும் சிறிய வாய்ப்புக்களே. நாளைய இயக்குனர் -2 வில் அப்போது ‘முண்டாசுப்பட்டி’ குறும்படமாக போட்டியிட்டது. அதில் முனீஸ்காந்த்தாக நடித்தவர் டப்பிங் பேசமுடியாததால் அவருக்குப் பதில் முனீஸ்காந்த்தாக நான் டப்பிங் பேசினேன்.
பின்பு முண்டாசுப் பட்டி திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இயக்குநர் ராம்குமார் அதில் என்னை வெட்டியானாக நடிக்க தேர்வுசெய்திருந்தார். திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்து முனீஸ்காந்த்துக்கான டயலாக்குகளைக் கொடுத்து படிக்கச் சொன்னார். என்னிடம் பணம் கொடுத்து பழைய காலத்து உடைகளை வாங்கிவரச்சொல்லி போட்டு என்னை நடிக்கச் சொல்லி அவற்றை சாதாரண வீடியோ கேமிராவில் எடுத்தார்.
அவற்றை தயாரிப்பாளரிடம் போட்டுக் காட்டி இவர்தான் முனீஸ்காந்த் என்று கூற அவரும் சம்மதிக்க நான் முனீஸ்காந்த்தாக உருமாறினேன். நான் வில்லனாகத்தான் நடிக்க வந்தேன். நகைச்சுவை என்னை தேர்ந்தெடுத்தது. ரஜினிகாந்த் சார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாரப்பா இந்த முனீஸ்காந்த் என்று கேட்டாராம். அவருடைய வெறியனான எனக்கு மிகப் பெரிய பாராட்டு இதுதான்..” என்கிறார் முனீஸ்.