நடிகர் தம்பி ராமையா நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி சாட்டை போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து பெயர் வாங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் புதுக்கோட்டையருகே ராராபுரம் என்கிற கிராமம்.
இவருக்கு உடன் பிறந்த தம்பிகள் மூவர், ஒரு தங்கை என எல்லாருடைய வாழ்க்கையையும் சுமக்கவேண்டிய பொறுப்பு இளம்வயதிலேயே விழுந்தது. பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்தியுள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேடியபடியே லாட்டரி் சீட்டு கம்பெனி, சாப்பாட்டு மெஸ் கடை, டீக்கடை என்று எல்லாவிதமான வேலைகளையும் பார்த்து தனது குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கிறார். இவரது மனைவி பெயர் பொன்னழகு என்கிற சாந்தி. இவருக்கு விவேகா என்கிற மகளும், உமாபதி என்கிற மகனும் உண்டு.
சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் மேல் தீவிர பற்று கொண்டவர் ராமையா. தனக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு விவேகானந்தர் பெயரைத் தான் வைக்கவேண்டும் என்றிருந்தவருக்கு முதலில் பெண்குழந்தை பிறக்கவே மகள் பெயரை விவேகா என்று வைத்துவிட்டார். உமாபதியும் கதை எழுதுவது மற்றும் நடனம் ஆடுவது என்று தேர்ந்துவிட்டபடியால் அடுத்தபடியாக உமாபதியை நடிக்கவைக்க முயற்சி செய்ய இருக்கிறாராம்.