naadan-movie-review

1930களில் பெட்ரமாக்ஸ் விளக்கொளியில் பெண்வேடமிட்டு நடித்த  ஆண் நடிகரான தேவதாஸின் தாத்தா.. நடிப்பதான காட்சியோடு கறுப்புவெள்ளையில் சட்டையணியாத பார்வையாளர்களோடு படம் தொடங்கும்போது அப்பட்டமான ஒரு கடந்தகாலத்துக்குள் நாம் பிரவேசிக்கிறோம். 30களிலிருந்து கேரள நாடக வரலாற்றுச் சுவடுகளைத் தொட்டுச்செல்கிறது இயக்குநரின் குரல். பின் 1959களின் காலகட்டத்தில் ‘நீங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்’

போன்ற புரட்சிகர நாடகங்களால் கேரளம் அதிர்ந்து கொண்டிருந்த காலம். அரசு காவல்துறை கொண்டு தடுப்பதும் அதைமீறி நாடகத்தை நிகழ்த்துவதைத் தங்கள் சமூகக் கடமையாகக் கருதி ஒப்பனையுடன் ஓடங்களில் ஆற்றைக் கடக்கும் நாடகக் காரர்களில் ஒருவரான தேவதாஸின் தந்தை பரதன். அப்போது இணைந்திருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போர்வாளாக  கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப் (KPAC)  இருந்த காலம். கே.பி.ஏ.சி. பரதன் என்று அறியப்பட்ட தேவதாஸின் தந்தையான பரதன் 1979இல் கட்சி பிளவுபட்டபோது சர்க்கவேதி பரதனாக சொந்த நாடகக் குழுவை ஆரம்பிக்கிறார். 40ஆண்டுகால நாடக ஓட்டத்தை முடித்துக் கொண்டு பரதன் தன் மூச்சை நிறுத்தியபோது தேவதாஸ் ஒரு பள்ளி மாணவன். தன் தாத்தாவின், தந்தையின் பாதையில் தானும் பயணப் பட முடிவெடுக்கிறான். 1970கள் 80கள் மற்றும் 90களில் உச்சம் தொட்டிருந்த சமூகநாடங்களின் பொற்காலத்தில் தேவதாஸ் ஒரு நாடக நட்சத்திரமாகப் பிரகாசிக்கத் தொடங்குகிறான்.

தேவதாஸ் சர்க்கதேவி அவன் தந்தையைப் போன்றே ஒரு இடதுசாரி நாடகக்காரன். கலை சமூகமாற்றத்திற்கானது என்ற நம்பிக்கையில் செயல்படுபவன். தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளின் நடுக்கூடங்களில் வந்தமர்ந்தபிறகு, முற்றவெளிகளில் நாடகம் பார்ப்பதான பழக்கம் பழங்கதையாய் மாறத் தொடங்கிய காலகட்டத்தின் முன்னும் பின்னும் வாழும் வரமும் சாபமும் ஒருங்கே அமையப் பெற்றவன். இரண்டாவது தலைமுறையாக சர்க்கதேவி நாடகக் கம்பெனியை நடத்திவரும் லட்சியக்காரன். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லட்சியவாதிகளுக்கு என்ன வேலை இருக்கமுடியும். தேவதாஸ், நடிகனாகவும் நாடக ஆசிரியனாகவும் ஓஹோவென்றிருந்த காலம் ஒன்றிருந்தது. அது செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் நாடகக் கலைஞர்களின் மேடைகளை பிடுங்கிக் கொள்ளாத காலம். தேவதாஸின் அனல் பறக்கும் வசனங்களும் நடிப்பும் மக்களின் பிரச்சனைகளைப் பேசும் பாங்கும் கேரளம் முழுக்க பிரசித்தமான காலமாக அது இருந்தது. உடன் நடிகையை மணந்து இரண்டு பெண்குழந்தைகளோடு… மகிழ்ச்சியான நாட்கள் அவை.

நாயகிகள் பல்வேறு காரணங்களால் நின்றுவிடுவதும் குழுக்கள் செய்வதறியாது கலங்கி நிற்பதும் நாடக்கக்குழுக்கள் சந்தித்தே ஆகவேண்டியவை அல்லவா. சர்க்கதேவி குழுவிலிருந்த நாயகி திருமணமாகி கணவன் ஆட்சேபிக்க.. மிகச்சிரமத்தில் குழு இருந்தபோது ஒரு புதிய நாயகியாக ‘ஜோதி‘ வருகிறாள். நொடித்துப் போன குடும்பப் பின்னனி கொண்ட அதே நேரத்தில் இளமையும் அழகும் அசாத்தியமான நடிப்புத் திறனும் கொண்டவளுமான ‘ஜோதியைப் ‘ பார்த்த நாளிலிருந்தே அவள் மேல் மையல் கொள்கிறான் தேவதாஸ். வெளியூர் நாடகத்திற்காகச் சென்று தங்கியிருந்த ஒரு இரவில் குடிபோதையும் சேர்ந்துகொள்ள ‘ஜோதியின்‘  அறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அவளை அடைகிறான் தேவதாஸ். அப்போதைய சூழலும் குடும்பநிலையும் அதை முழுக்க எதிர்க்கும் துணிவை அவளுக்குத் தரவில்லை. இது தொடர்கிறது. ஒரு ஆசை நாயகியைப் போல அவளைப் பாவிக்கத் தொடங்குகிறான். இருவரும் நெருங்கியிருந்த ஒரு வேளையில் தற்செயலாக அறைக்குள் நுழைந்த தேவதாசின் மனைவி மனமுடைந்து இரண்டு குழந்தைகளோடு அவனைவிட்டுப் பிரிகிறாள்.
 
ஜோதியை மனதில் கொண்டு அவனுடைய ஆகச் சிறந்த நாடகமான ‘ஜ்வாலாமுகி’ யை எழுதுகிறான் தேவதாஸ். ஒத்திகை முடிந்து நாடகம் தொடங்க சில நாட்களே இருக்கும் நிலையில் சினிமா இயக்குநரொருவரை குழுவின் பாடல் ஆசிரியர் அழைத்து வருகிறார். நாடகம் நாளை அரங்கேற இருக்கும் வேளையில் ஜோதி சினிமா வாய்ப்புக்காக சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகிறாள். சர்க்கவேதி நாடகக் குழுவின் வீழ்ச்சி அன்று தொடங்குகிறது.

நாடகவாய்ப்புகள் குறைந்து கம்பெனி தள்ளாடத் தொடங்குகிறது. கடன் தொல்லையில் கம்பெனியின் கடைசிச் சொத்தான வேனையும் கடன்காரனிடம் கொடுத்துவிட்டு நடைபிணமாகிறான். குடிப்பழக்கம் உச்சமடைகிறது. காலமாற்றத்திற்கேற்ப கேரள நாடகங்களின் முகம் மாறத்தொடங்குகிறது. நாடகங்களில் அரூபக் காட்சிகளும், குறியீடுகளுமாய் மேற்கத்தியக் கோட்பாடுகளின் முலாம் பூசிய நவீன நாடகங்கள் தேவதாஸை காலத்தினின்று தூக்கியெறிகின்றன. தன்னுடைய ஒற்றை அறையில் குடித்தபடிகிடக்கிறான். இறுதியில் துரோகத்தின் கசப்பை வாழ்நாள் முழுவதும் நினைவினில் சுமந்த அவன் மனைவி மற்றும் குழந்தைகளால் தேவதாஸ் மீட்கப் படுகிறான். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த அவன் மகள் நான்காவது தலைமுறையாக தன் தந்தையின் லட்சிய நாடகமான ‘ஜ்வாலாமுகியை’ அரங்கேற்றுகிறாள். முன் வரிசையில் அமர்ந்து குமுறி அழுகிறான் தேவதாஸ்… எல்லாவற்றிற்காகவும்.

இந்த எளிமையான நாடகக் காரனின் கதை இந்தியாவில் பல மாநிலங்களின் நாடக வரலாற்றை கோடிகாட்டிச் செல்வதாகும். எங்கும் ஒரு காலகட்டத்தில் நடக்கச் சாத்தியமான கதைச் சம்பவங்கள். இதன் ஊடாக நாடகக் கலைஞர்களுக்கே இயல்பான அந்யோன்யம், சகோதர உறவு, மேடைதரும் அளப்பரிய மனமகிழ்ச்சிக்காக எந்த அவமானங்களையும் வாழ்க்கை நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் தன்மை.. ஒத்திகை நேர வேடிக்கைகள்… சீண்டல்கள்.. என்றும் நெஞ்சில் நீங்காமல் தங்கும் நினைவுகள்… இப்படி நாடகக் காரர்களின் உலகை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கமல்.
கால மாற்றத்தினூடாக ஒரு கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கையும் கலையுலக வாழ்க்கையுமாக விரியும் இத்திரைப்படம் ஒரு தனிமனிதனினின் கதையாக மட்டும் குறுகிவிடாமல் அவனைச் சாக்காகக் கொண்டு ஒரு காலத்தின் உயிர்ப்பான இயங்கியலைப் பதிவுசெய்வதில் மகத்தான வெற்றிபெறுகிறது. (ராஜபார்ட் ரங்க துரையில் ரங்கதுரை என்ற தனிமனிதனின் அவலமாகக் குறுகிப் போவது தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது)

திரைக்கதையை முன்னும் பின்னுமாக விவரிப்பதில் ஒரு தற்காலத் தன்மையும் அதே நேரத்தில் 1930களிலிருந்து 90கள் வரையிலுமான காலத்தை செவ்வியல் தன்மை மேலோங்குமாறும் அமைத்துள்ளமை சிறப்பு. ஒரு கதையின் பாத்திரங்களை உயிர்பிக்கிறவர்களாக நடிகர்கள் அமைந்துவிடும்போது அது பெரும்பலமாக அமைந்துவிடுவது கண்கூடு. இப்படத்தில் மிகப்பொருத்தமான நடிகர்தேர்வு. குறிப்பாக  கே.பி.ஏ.சி.பரதனாகத் தோன்றுபவர் ‘நாடக மேடை என்பது யுத்த முனை போன்றது’ என்று முழங்கும்போது நம்மால் சிலிர்க்காமல் இருக்க முடியாது. இப்படத்தின் துணைநடிகர்கள், பெரும்பாலும் மிகக் குறைந்த வசனங்கள் பேசும் வாய்ப்புப் பெற்றவர்கள்கூட அவர்கள் இருப்பினால் மட்டுமேகூட பெரும்பங்களித்திருப்பதை இப்படத்தில் காணமுடியும். தொழில்நுட்ப விசயங்களும் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. குறிப்பாக இசை இப்படத்தின் மிகப்பெரிய பலம். பழைய பாடல்களையே புதிதாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேடை நாடகத்தின் ஆன்மாவை அள்ளிக்கொண்டுவரும் பாடல்கள் மற்றும் இசை. ‘சர்க்கவேதிகளே’ என்ற பாடல் அப்படியே நம்மை நாடக மேடைமுன் புழுதியில் அமர்த்திவிடுவது. வைக்கம் ஜெயலட்சுமி எனும் பாடகியின் குரலில் அடிக்கடி வரும் ‘ஒற்றைக்கு பாடுன்ன பூங்குயிலே…’ எனும் பழையபாடல் அல்லது பழைய காலம் உறைந்துநிற்கும் பாடல் தேனாகச் சொட்டுகிறது. அற்புதம். கடனுக்காக வண்டியைக் கடன் காரனிடம் கொடுத்துவிட்டு நடுவழியில் இறங்கி கடற்கரையோரம் உட்கார்ந்து எல்லாம் முடிந்த மனநிலையில்.. குழுவின் மூத்த நடிகையான ராதா சேச்சி.. தேவதாசின் தந்தையின் காலத்திலிருந்து குழுவில் இருப்பவர்… தேவசாஸிடம்… ‘மோனே…17வயசில நீ இந்தப் பொணங்கள சுமக்க ஆரம்பிச்ச… என்னத்த கண்ட… உங்கப்பா.. பரதன் சேட்டன் சொல்வார்… ‘நாடகம்தான் முதல்ல… அதுக்கப்புறம்தான் வாழ்க்கைன்னு… நானும் அப்படித்தான் நம்புனேன்… ஆனா அனுபவத்துல சொல்றேன்… வாழ்க்கைதான் முக்கியம்.. அதுக்கப்புறம்தான் நாடம்… நாடகத்துக்கு அப்புறமும் வாழ்க்கை இருக்குதானே…’என்று கண்ணீர் திரையிட சொல்லும் போது ராதாசேச்சி இளமையில் மேடையில் தோன்றிப் பாடும் பாடலும் காட்சிகளும் இணைக்கப்படும் விதம் சினிமாவின் அசாத்திய இடங்களைத் தொடுவதாக அமைகிறது.

நாற்பதுகளுக்கு மேல் இருப்பவர்களால், நாடகத்தோடு ஏதாவதொரு விதத்தில் பரிச்சயம் கொண்டவர்களால் இப்படத்தை மிகவும் நெருக்கமாக உணரமுடியும். குறைந்தபட்சம் வள்ளிதிருமணம், அரிச்சந்திர மயானகாண்டம் போன்ற நாடகங்களைத் தெருவில் உட்கார்ந்து பார்த்தவர்களாய் இருந்தால் கூட இன்னும் கூடுதலாய் இப்படம் பிடித்துப் போகக் கூடும். இந்தத் திரைப்படம் தனிப்பட்ட முறையில் எனக்கு நெருக்கமானதாகத் தோன்றுவதற்குக் காரணங்கள் உண்டு. தமிழகத்தில் 80களில் ஒரு நவீன அலை, நாடக உலகில் எழுந்தது. அப்போது நாங்கள் கல்லூரிகளில் வாசித்துக் கொண்டிருந்தோம். பாதல் சர்க்கார்… நாடகப்பட்டறைகள்… மூன்றாம் நாடகம்… நிஜநாடக இயக்கம்… பரீக்ஷா ஞானி… கூத்துப்பட்டறை… முத்துசாமி… ராமசாமி… சுபமங்களா நாடகவிழாக்கள்… என்று பரபரத்துக் கொண்டிருந்த நாட்களை அருகிருந்து கவனித்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்… நாடகம் ஒரு தீவிரமான அரசியல் செயல்பாடாக நம்பப்பட்ட நாட்களாக அவை இருந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது என்று நினைவு…மதுரையில்  நண்பர்கள் சுந்தர்காளி..பாபு.. லோகு என்று கிருஷ்ணாபுரம் காலனி முச்சந்தியில் வீதிநாடகம் போட்டபோது நானும் ஓரத்தில் இருந்திருக்கிறேன்… அதில்கடைசியாக… ‘உங்க தாத்தாவுக்கு தாத்தாவோட தாத்தாவுக்கு தாத்தா என்ன மதம்?’ என்று நாடகம் பார்ப்பவர்களை ஒவ்வொருவராகக் கேட்பதாக நாடம் முடியும் என்பதாக நினைவு…அப்புறம் கல்லூரியில் மாணவர்களோடு மதுரையைச் சுற்றிலும் கிராமத்து வீதிகளில் பெரும் கூட்டதிற்கிடையே நாடகம் போட்டிருக்கிறோம். 90களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தபின் தூர்தர்ஷன் காலத்தில் ஒலியும் ஒளியும் இல்லாத நேரங்களில் மட்டுமாவது மக்கள் கூடினர். சன் டிவி யுகத்தில் மக்களை தெருவுக்குக் கொண்டுவரும் சக்தி நாடகங்களுக்கு இல்லாமல் போனது.

‘நாடன்’ எனக்குள் நாடகம் பற்றிய நினைவுகளையும் கேள்விகளையும் எழுப்பிவிட்டது. இசை நாடகங்கள், பாய்ஸ் கம்பெனிகளுக்குப் பின் மேடைநாடகங்களில் ஒரு பெரும் வீழ்ச்சியும் பின் 70களின் பிற்பகுதியில் ஒரு தொடர்ச்சியற்ற நவீன பரிசோதனை நாடக வகையும் தோன்றியதுதான் நம் பின்னடைவுக்குக் காரணமா?

சமீபத்தில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் சுற்றுப் பயணம் சென்றபோது அவதானித்தவைகளிலிருந்து இதற்கான விடைகளை யூகிக்க முடியும் என்று தோன்றியது.  சினிமாவின் தாயகமான மேற்கத்திய நாடுகளில் நாடகம் உயிர்ப்போடு இருப்பதற்கான காரணங்களை நேரில் கண்டபோது வியப்பாக இருந்தது. உலகம் முழுவதும் சினிமா தோன்றியபோது அது நாடகத்தை பாதிப்பதாகவே இருந்திருக்கிறது. ஆனால் சினிமாவால் தொடமுடியாத விசயமாக கனடாவின் டொரொன்ட்டோ நகரிலிருந்து ஒன்றரை மணிநேர மகிழ்வுந்து பயண தூரத்தில் ‘ஸ்ராட்ஃபோர்ட்’ (Stratford) என்றொரு சிறு நகருக்கு நாடகம் பார்க்க என் நண்பரின் மனைவி எங்களை அழைத்துப் போனார். அது ஒரு வேலைநாளின் பிற்பகல் என்பதால் கட்டணம் குறைவு. அதுவே 45 கனடியன் டாலராக இருந்தது. சற்றுதாமதமாக நாங்கள் போய்ச்சேர்ந்த போது அரங்கு 90% நிரம்பியிருந்தது. சிறு மாணவர் கூட்டத்தைத் தவிர்த்து பெரும்பாலும் 40களைத் தாண்டியவர்கள். அந்த நாடகம் ‘மீயூசிக்கல்’ வகையைச் சார்ந்தது. மிகவும் தொழில்முறையான நேர்த்தியான தயாரிப்பாக அது இருந்தது.

  அந்த சிறுநகரில் இன்னும் இரண்டு நாடக அரங்குகள் இருப்பதாகவும்.. வருடத்தில் பனிக்காலம் முடிந்தபின் ஆறு மாதங்கள் நாடகவிழா ஆண்டுதோறும் நடைபெறுவதாகவும் அந்த நகரே நாடகச் செயல்பாடுகளாலே இயங்குவதாகவும் தெரியவந்தது. ஒவ்வொரு நாடகமும்மூன்று நான்கு வாரங்களுக்கு நடைபெறுவதாகவும், முழுக்க முழுக்க அது வணிக சாத்தியங்களை நிறைவேற்றும் நிகழ்வு என்றனர். இதற்காக டொரொன்டோ நகரிலிருந்து பேருந்துகளில் அழைத்து வந்து செல்ல ஏஜென்டுகளும் ஏற்பாடுகளும் உள்ளன என்ற தகவலும் கிடைத்தது.

நியூயார்க் நகரின் சங்கதியே வேறாக இருந்தது. அது சுற்றுலா பயணிகள் குவியும் நகரம். பிராட்வே ஷோ என்பது சுற்றுலா கவர்ச்சிகளில் ஒன்றாகவும் திருப்பதியில் லட்டு போலவும் இருக்கிறது. இசை விற்பனர் ஆன்ட்ரூ லாயிட் வெபரின் சில இசைத் தொகுதிகளைக் கேட்டிருந்ததன் அடிப்படையில் ‘ஃபான்டம் ஆஃப் ஓப்ரா; (Phantom of Opera) எனும் இசைநாடகத்தை (Musical) தேர்ந்தெடுத்தேன். வார இறுதிகளின் கட்டணம் அதிகம் என்பதால் ஒரு வியாழன் இரவுக்காட்சிக்கு ஆகக் குறைந்த கட்டணமான 50 டாலர்கள் (மூவாயிரம் ரூபாய்தான்) கொடுத்துச் சென்றோம். அரங்கு நிறைந்திருந்தது. கதை புரியாவிட்டாலும் கண் இமைக்க முடியவில்லை. நடிப்பும் பாட்டும் நடனமுமாய் வாழ்நாளில் கிடைத்தற்கரிய தருணமென்பேன். தொழில்நுட்பமும், கலையும் வணிகமும் கைகோர்த்து நிற்பதைக் கண்கூடாகக் கண்டேன். முதலாளித்துவத்திலிருந்து கற்றுக் கொள்ள விசயங்கள் உண்டு என்பது கொஞ்சம் வருத்தமான நிஜமாக இருந்தது. அந்த நாடகத்தில் குறைந்தது 40- 50 நடிகர்களாவது இருந்திருப்பார்கள். இசை, அரங்கமைப்பு என்று கூடுதலாக ஒரு 50 பேர் … குறைந்தபட்சம் 100 பேர் பங்குபெறுவார்கள் என்று தோன்றியது. இந்த நாடகம் 1986ஆம் ஆண்டு தொடங்கி 27 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவகிறதாம். இந்த நாடகம் இங்கு மட்டுமில்லாமல் 30 நாடுகளில் 151 அரங்கங்களில் 13 மொழிகளில் நடைபெறுகிறதாம். இது சம்பாதித்திருக்கும் 5.8 பில்லியன் டாலர்கள் பல ஹாலிவுட் சூப்பர் கிட் திரைப்படங்கள் தொடாத தொகை… போன்ற பல தகவல்களை உடன் வந்த அமெரிக்க நண்பர் ஆல்ஃபிரட் சொன்னபோது என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. மேலும் இதுபோல் 20க்கும் மேற்பட்ட நாடகங்கள் வருடக்கணக்காக நடந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது.

என்னைக் கவர்ந்த் அம்சம் என்ன வெனில் சினிமாவால் பெரும் பொருளீட்டும் அமெரிக்காவில் நாடகமும் ஒரு தீவிரமான கலையாகவும் வணிகமாகவும் ஜீவித்துக் கொண்டிருப்பதுதான். இந்த வகையான மீயூசிக்கல்ஸ் எனப்படும் இசைநாடகங்களை எழுதுவதற்கென்றே நாடக ஆசிரியர்கள் உருவாகியிருப்பதும், அபாரமான திறமை கொண்ட நடிகர்களை நூற்றுக்கணக்கில் உற்பத்திசெய்யும் நாடக நடனப் பள்ளிகள் இயங்குவதையும் தொழில்நுட்பரீதியில் அரங்க நிர்மானம், ஒளி ஒலி வடிவமைப்பாளர்கள் இப்படி ஒவ்வொரு குழுவிலும் 100 பேர் வாழ்க்கை நடத்த முடியுமென்றால் நியூயார்க் நகரில்மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு நாடகம் சோறுபோடும் எனும்போது ஏன் நாடகம் தேயப் போகிறது.

கல்வியும் கலையும் வணிகமும் இணையும் ஒரு சூட்சுமத்தை நுகர்வோர் முதலாளியம் உருவாக்கி நடைமுறைப் படுத்திவந்துள்ளது. நடனம், இசை, நடிப்பு, தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் என எல்லாவற்றையும் கல்விப் புலத்திற்குள் கற்றுக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள். அவற்றை வணிகப் படுத்துவதற்கான சாத்தியங்கள்.. அவற்றால் புகழும் பணமும் பெறமுடிகின்ற சூழல்.. ஆக சினிமாவுக்குப் பின்னும் நாடகம் இருக்கிறது… ஆரோக்கியமாக..

தமிழில் முன்னொருகாலத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளிதிருமணம் என்றொரு நாடகம் உண்டு. அவர் எழுதிய மூலத்தின் சிதைந்தவடிவமே இப்போது நடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாடத்தெரியாத திறமை குறைந்த நடிகர்களோடு, எவ்விதமான தொழில்நுட்ப நேர்த்தியும் இல்லாத மேடைகளில் திருவிழக்களுக்கான சடங்காக அது மாறியுள்ளது.  நாடகத் தருணங்களும் தன்மைகளும் இணைந்த அருமையான பிரதி.. நன்றாகப் பாடத் தெரிந்த நடிகர்களும் நவீன  மேடைத் தொழில்நுட்பங்களும் சேர்ந்த வள்ளிதிருமணம் போல ஒரு நாடகம் சென்னையிலோ மதுரையிலோ நடக்குமென்றால் தினமும் பார்க்க பார்வையாளர்கள் கிடைக்காமலா போவார்கள்?

-இரா.ப்ராபகர்
http://prabahar1964.blogspot.in/2014/08/blog-post.html
————————————————-

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.