எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோரின் தலைமுறையில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு பல குறிப்பிடும்படியான படங்களில் நடித்தவரும், லட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்டவருமான எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
சென்னையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் வசித்து வந்த எஸ்எஸ்ஆருக்கு வயது 86. இரண்டு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை மரணம் அடைந்தார்.
நாடக நடிகராக இருந்து திரையுலகிற்கு வந்தவர் நூற்றுக் கணக்கான படங்களில் நடித்துள்ளார். தெள்ளத் தெளிவான தமிழும், வசன உச்சரிப்பும் அவருக்கு எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
குறிப்பாக அந்தக் காலத்தில் வெளியான “பராசக்தி, மனோகரா, தை பிறந்தால் வழி பிறக்கும், ரத்தக் கண்ணீர், சிவகங்கைச் சீமை, குமுதம், ஆலயமணி, காஞ்சித் தலைவன், பூம்புகார், உட்பட பல படங்கள்” அவருடைய நடிப்புத் திறமைக்கு சான்றாக அமைந்த படங்கள். அவர் நடித்த ‘முதலாளி’ படம் தேசிய விருதையும் பெற்ற படமாகும்.
தமிழ்த் திரையுலகில் நடிகர் ஒருவர் முதன் முதலாக எம்எல்ஏவாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த பெருமையப் பெற்றவர் எஸ்எஸ்ஆர்.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டு போராட்டத்தை முடித்து வைத்தார்.
தமிழ்த் திரையுலகம் தனது படங்களால் தமிழைப் பெருமைப்படுத்திய ஒரு சிறந்த நடிகரை இழந்துவிட்டது….
எஸ்.எஸ்.ஆரின் தந்தையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் வகுப்புத் தோழர்கள்.
சிறுவயதில் நன்றாக படிக்கக்கூடிய மாணவரான எஸ்.எஸ்.ஆர் யதேச்சையாகதான் நாடக உலகுக்கு வந்தார்.
டி.கே.எஸ். குழுவில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் மிக விரைவிலேயே கதாநாயகன் அந்தஸ்துக்கு வந்துவிட்டார். தன் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்ட நிலையில் அந்நாடகக் குழுவில் இருந்து வெளியேறினார்.
பெரியார், அண்ணா மீதான இயல்பான ஈர்ப்பு. கலைஞர், சிவாஜி, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., டி.வி.என்., ஏ.பி.என்., என்று கலையுலகின் முக்கியஸ்தர்களுடனான முதல் அனுபவம் என்று மிக எளிமையான மொழியில் தமிழ் கலையுலகின் ஆரம்பகால வரலாற்றை தன் வரலாறு கூறும் சாக்கில் சொல்லிக்கொண்டே போகிறார் இலட்சிய நடிகர்.
குறிப்பாக மதுரையில் நடந்த திராவிடர்கழக நிகழ்வு ஒன்றில் மதவெறியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது
ஏற்றுக்கொண்ட பகுத்தறிவு கொள்கைக்கு முரணான புராணப்படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கடைசிவரை இலட்சியத்துக்காக இலட்சங்களை புறக்கணித்த உண்மையான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மட்டுமே.