இணையப்போராளிகள் தனக்கும் அஞ்சானுக்கும் ஒரு தற்காலிக ஓய்வுகொடுத்துவிட்டு, கத்தியையும் முருகதாசையும் கையில் எடுத்துக்கொண்டதில் ஓரளவுக்கு உற்சாகமாக இருந்து, முருகதாஸின் படத்தை மூன்றுவேளைகளும் விழுந்து வணங்கி வந்த லிங்குசாமிக்கு, அவரது அடுத்த பட ஹீரோவான கார்த்தியிடமிருந்து, சங்குச்சத்தம் வந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் நவில்கின்றன.
தற்போது ‘கொம்பன்’ படத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் கார்த்தி அடுத்து லிங்கு இயக்கும் ‘எண்ணி ஏழே நாள்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. ‘அஞ்சான்’ ரிலீஸுக்குப்பின் படு நோஞ்சான் ஆன நிலையில், சுதாரிப்பாக இருந்த கார்த்திக், லிங்குவை சந்திப்பதை தற்செயலாக தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார். அதற்கிடையில் லிங்குவின் அனுமதியின்றி நாகார்ஜுனாவுடன் நடிக்க ஒரு தெலுங்குப்படத்திற்கும் கால்ஷீட் தந்தார்.
எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே நடிக்கும் லெவலுக்கு அஞ்சான் ரிலீஸ் டைமிலேயே வந்திருந்த லிங்கு அதையும் கண்டுகொள்ளாமல், ’இன்னொரு தமிழ்ப்படம் கூட நடிச்சிட்டு வாங்க. நான் கதைய நல்லா மெருகேத்தி காத்திக்கிட்டிருக்கேன்’ என்றிருக்கிறார்.
ஆனால் கார்த்தியோ, நாலைஞ்சு ஃப்ளாப்புகளுக்கு இப்பதான் ‘மெட்ராஸ்’ வந்து காப்பாத்திருக்கு. அவர்கிட்ட மாட்டினா ‘எண்ணி ஏழே மாசத்துல நம்மள காலியாக்கிருவாரு’ என்ற முடிவில், லிங்கு இருக்கும் தென்மேற்கு திசைப்பக்கம் தலைவைத்துக்கூட படுக்கும் ஐடியாவில் கூட இல்லையாம்.