ரேடியோ பெட்டி ஊருக்கு ஒன்று என்று இருந்த காலத்தில், ஒரு கிராமத்தில் ஈரமனதுள்ள ஒரு பண்ணையாரின் வீட்டில் வந்து சேரும் ஒரு பியட் கார் அந்த ஊர் மனிதர்களின் வாழ்வில் எவ்வாறு ஊடாடுகிறது என்பதை அழகியலோடு சொல்லிய படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’.
புதிய இயக்குனர் அருண் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ், துளசி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வர்த்தகரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத்துடன் நின்று விடாமல் பல விருதுகளையும் அள்ளி வருகிறது.
ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என பல நாடுகளின் திரைப்படவிழாக்களை பார்த்த ‘பண்ணையாரும் பத்மினியும்’, இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களுக்கான வரிசையில் தேர்வுக்குழுவால் சிறந்த திரைப்படம் என்ற விருது வாங்கியது.
தற்போது நடக்கும் கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் இப்படம் பெற்றுள்ளது.
தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ள அருண் கூறுகையில் “ இவ்வகையான விருதுகள் எங்களை போல் உள்ள வளரும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாய் அமைகிறது.” என்கிறார்.
இப்படம் வரவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது. இவ்வாறான திரைப்படங்கள் அதிகம் தமிழில் வருமானால் தமிழ் சினிமா சர்வதேச அளவில் நன்மதிப்பை பெறுவது திண்ணம்.