பெரும்பாலும் காதலை மையமாக வைத்தே படங்கள் இயக்கி வரும் இயக்குனர் ‘எழில்’ன் கடைசி இரு படங்கள் வெற்றிப் படங்களில்லை. தற்போது விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்க அவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளக்கார துரை’. கிறிஸ்துமஸூக்கு வெளிவர இருக்கும் படம் பற்றி அவரிடம் பேசியபோது..
‘வெள்ளைக்காரத் துரை’ யார் சார் ?
ஊர்ப்புறங்களில் வெட்டியாக பந்தா காட்டிக்கொண்டு திரிபவர்களை ‘இவரு பெரிய வெள்ளக்கார துரை’ என்பார்கள். பொறுப்புகள், கஷ்டங்கள், லட்சியங்கள் இல்லாத ஆனால் என்னேரமும் பரபரவென்று சுற்றிக்கொண்டிருக்கும் ஆள்தான் நம் ஹீரோ. அப்படி சும்மா இருப்பவருக்கும் ஒரு பிரச்சனை வருகிறது அதை அவரே எப்படி தீர்த்துக்கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை. கதை சீரியஸாக ஆங்காங்கே தோன்றினாலும் இது முழுக்க காமெடிக் கதை.
விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா பற்றி சொல்லுங்கள்..
கமர்ஷியல் சினிமாவுக்கு காதல் தானே முதல் தேவையாக இருக்கிறது. இதுவரை வந்திராத புதிய ஜோடியாக விக்ரமும், ஸ்ரீதிவ்யாவும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். விக்ரம் பிரபு கூச்ச சுபாவம் மிகுந்தவர். இதுவரை அவர் நடித்த படங்களில் காதல் முன்னிலையாக இல்லை. இப்படத்திலோ காதலிப்பதுதான் அவர் வேலையே. ஸ்ரீதிவ்யா ப்ரேமுக்கு ப்ரேம் அழகாய் மின்னும் தேவதையாக வரும் அதே வேளையில் கதையைப் புரிந்து நடிக்கும் பக்குவமும் கொண்டிருக்கிறார். விக்ரம் பிரபு இதுவரை காமெடி செய்திருக்கவில்லை. அவரது தந்தை பிரபுவின் ‘அரங்கேற்ற வேளை’ போலவும் தாத்தா சிவாஜியின் ‘கல்யாண கலாட்டா’ போலவும் சொல்லிக்கொள்ளும்படியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
உங்களது சமீபத்திய படங்களில் காமெடி வாசம் அதிகம் வீசுகிறதே. காரணம்?
நல்ல சினிமா எடுத்தால் மட்டும் போதாது. வெற்றிக்காக வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இயங்கவேண்டும். மறுபுறத்தில் ஆபாசம், வன்முறை, அறுவெறுப்பான விஷயங்களை புகுத்தி கவனம் பெறுவதன் மூலம் வெற்றியடைய நினைக்கிறார்கள். பலர் வெற்றியும் பெறுகிறார்கள்.
ஆயிரங்களில் இருந்து என் வாழ்க்கை லட்சங்களுக்கு மாறியபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் பின்பு 5 வருடங்கள் படமே இல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறேன். குழந்தைகளின் ஸ்கூல் பீஸ், வீட்டு வாடகை, கொடுக்க முடியாமல் இருந்தபோதும் இதே சினிமாவில் தான் இருந்தேன்.
இத்தனைக்கும் எனது ‘தீபாவளி’ ஹிட் படம் தான்.
இப்போது எனக்கு கதையை நம்பி பயணம் போகவே பயம் வந்துவிட்டது. காசு கொடுக்கும் தயாரிப்பாளருக்கும், நமது வாழ்க்கைக்கும் உத்திரவாதம் கிடைக்குமாறு சினிமா எடுக்கவேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அந்த முடிவின் பாதிப்பு தான் காமெடியை மையமாகக் கொண்ட ‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்கு ராஜா’வைத் தொடர்ந்து இப்போது ‘வெள்ளக்காரத் துரை’.
காமெடி படங்கள் தான் தமிழ் சினிமாவின் அடையாளம் என்று ஆகிவிடுமா ?
லட்சக்கணக்கானோரை சென்று அடையும் சினிமாவை கொடுக்கும் இயக்குனர்களுக்கு படத்தை நல்லதாகக் கொடுக்கவேண்டிய பொறுப்புணர்வு இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அதுபோன்ற இயக்குநர்களுக்கு மரியாதை தருவதில்லை. வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ நல்ல படம்தான். படத்தின் ரிசல்ட் ஏன் இப்படி ஆனது ? அதுபோல மிக மோசமான ரிசல்ட் வரவேண்டிய படமா அது?
இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் கனவு சினிமா என்ற ஒன்று இருக்கிறது. என்னிடம் கூட கனவுச் சினிமாவாக சில கதைகள் இருக்கின்றன. அதற்கு சில கோடிகள் வேண்டும். அதைவிட அது திரும்பக் கைக்கு கிடைக்கும் என்கிற உத்திரவாதமும் வேண்டும். அது இல்லாமல் இப்படங்களை எடுக்கமுடியாது. கொள்வாரில்லாத இடத்தில் கடை விரிக்க முடியாது. வக்கிரமான விஷயங்களை தனது படங்களில் வைக்கும் இயக்குனர்கள் பலர் படம் ஜெயிச்சதும் ‘ஸ்..அப்பாடா’ என்று பெருமூச்சு விடுவதை பார்த்திருக்கிறேன். நல்ல படங்கள் எடுப்பவர்களுக்கு இப்போது மன உளைச்சல்தான் அதிகம்.
போனவருடம் வந்த படங்கள் 160க்கும் மேல், இந்த வருடம் வந்திருக்கும் படங்கள் 200க்கும் மேல். வெற்றிகளின் எண்ணிக்கை அந்த அளவிற்கு ஏற்றார்போல் இல்லையே !!
பெரிய ஓப்பனிங். ஒரு வார கலெக்ஷனில் மொத்தமும் அள்ளிவிடுவது என்று இப்போது சினிமாவின் முகம் மாறி இருக்கிறது. பலவருடம் காத்திருந்து பெற்ற வெற்றிகளுக்கு இப்போது வேலை இல்லை. கலைஞனுடைய கனவு வெற்றியடைய அவன் செய்வது பாதிதான். மீதிப்பாதி அதை அங்கீகரிக்கும் ரசிகனிடம் இருக்கிறது. சின்ன ஸ்டார், பெரிய ஸ்டார் என்று பார்க்காமல் நல்ல விஷயங்களையும் தேடிச் சென்று பார்க்க ரசிகர்கள் முன்வந்தால் போதும். அப்போது அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்.