“விஸ்வரூபம் என் மனதிலும், என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்’’
படப்பிடிப்பு நிறைவு பெரும் தறுவாயில், ட்ரெயிலரை வெளியிட்டவுடன் கமல் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்.
படத்துக்கு இப்படி ஒரு தலைப்பு வைத்த தோஷமோ என்னமோ படம் துவங்கிய
சமயத்திலிருந்தே பொருளாதார ரீதியாக விஸ்வரூபமான பல பிரச்சினைகளை சந்தித்தார் கமல்.
ஆரம்பத்தில் படத்தை துவங்கிய பி.வி.பி.நிறுவனத்துக்கு, பணத்தை, ஏரியா விற்று இன்றுவரை செட்டில் பண்ணமுடியாத நிலையில், ஒரு கட்டத்தில், கமலின் விஸ்வரூபம் காணச்சகியாமல் ஒதுங்கிக்கொண்ட அந்த நிறுவனத்தின் பெயரையும் , விளம்பரங்களில் ராஜ் கமலுக்கு இணையாகப்போடவேண்டிய நிலை.
படத்தின் பட்ஜெட் இதுவரை 60 கோடியை தாண்டிய நிலையில், கமல் தனது சம்பளம் ஒரு 40 கோடி என்று கணக்கு வைத்துக்கொண்டு 100 கோடி என்று சொல்லிக்கொண்டிருப்பதால் யாரும் நெருங்கிவராத நிலையில் படத்தை அனைத்து ஏரியாக்களுக்கும் கமலே சொந்தமாக ரிலீஸ் பண்ணவேண்டிய நிலையில் இருக்கிறார்.
கமல் படத்தில் பின்லேடனாக நடித்திருக்கிறார். கதை அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதம் குறித்தது என்ற செய்தியும் படம் சரியாக வியாபாரம் ஆகாமல் இருக்கக்காரணமாக இருக்கலாம் என்று யோசித்த கமல், படம் தீவிரவாதத்தைப் பற்றியது அல்ல என்று திசை திருப்புவதற்காக, படத்தின் சிறு போர்சனாக வரும், ஒரு குடும்பக்கதை ஒன்றை எடுத்துவிட்டிருக்கிறார்.
கமல் சொல்லும் கதை இதுதான்:
அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலுடன் இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை மனைவியின் தொந்தரவின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத்.
ஆனால் நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது…
இதுதான் கதையின் மையக் கரு. இதில் யாரும் எதிர்பார்க்காத சில காட்சிகள் உண்டு. முழுசாக சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடுமே. அதான்.. மீதி வெள்ளித்திரையில்,” என்கிறார் கமல்.
ஆனால் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்,கமல் வெளியிட்டுள்ள 81 வினாடிகள் கொண்ட ட்ரெயிலரில் ,திகில் கிளப்பும் தீவிரவாதக்காட்சிகளே அதிகம்.