தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் என்று குறிப்பிடத்தக்க படங்களையெல்லாம் தயாரித்தது புதிய தயாரிப்பு நிறுவனங்களே.
திலகர் எதைப் பற்றிய படம்?
இது ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது.
இது 1990ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதைதான். அவருடைய கதையை மையமாக வைத்து விரிவாக்கி கற்பனையும் கலந்து உருவாகியுள்ள படம். இப்படக்கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.
இது நிச்சயம் தமிழ்த்திரையுலகில் பாசாங்கில்லாத செயற்கை பூச்சு இல்லாத மண் சார்ந்த பதிவாக இருக்கும்.மண் சார்ந்த கிழக்குச்சீமையிலே’,’தேவர்மகன்’ படங்கள் வரிசையில் ‘திலகர்’ படமும் இடம் பெறும்படி இருக்கும்
புதுமுகங்களை வைத்து இயக்கியது ஏன்?
இதில் பிரபலங்களை வைத்து எடுத்தால் அவர்களது முகம்தான் தெரியும். அந்தப்பாத்திரம் தெரியாது. எனவே நிறையபேரை புதுமுகங்களையே வைத்து எடுத்தேன். அறிமுகம் துருவாதான் நாயகன் .பிரபல நடிகர் என்றால் கிஷோர் இருக்கிறார். அவர் பணம் வருகிறது என்று எப்படிப்பட்ட படங்களிலும் நடிக்கும் நடிகரல்ல. கதை நன்றாக இருந்தால்தான் நடிப்பார். இந்தக் கதையைக் கேட்டு பிடித்துப்போய்தான் உடனே சம்மதித்தார்.
பிற நடிகர்கள்?
‘பூ’ ராமு முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவரது தோற்றத்தைப் பார்த்து அவருடன் வேலை பார்த்தவர்களுக்கே அவரை அடையாளம் தெரியவில்லை.கதாநாயகி இரண்டு பேர் ஒருவர் மிருதுளா பாஸ்கர். இவர் ‘வல்லினம்’ நாயகி. இன்னொருவர் அனுமோல் . ‘ஈசன்’ படப்புகழ் சுஜாதா மாஸ்டரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது. 90ல் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து சினிமாவுக்கு சிலவற்றை சேர்த்து இருக்கிறோம். அந்த திலகர் பற்றிய நிகழ்வுகள் 2 ஆண்டுகளில் நடந்திருக்கும் இதில் நடப்பது 10 ஆண்டுகள் இருக்கும்.பிரச்சினை ஏதுமில்லை.தங்கள் ஊர் சம்பந்தப்பட்டகதை என்றதும் மகிழ்ச்சி அடைந்த நெல்லை மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
படத்தில் மறக்க முடியாத அனுபவங்கள்?
படப்பிடிப்பு அனுபவங்கள் எல்லாமே மறக்க முடியாதவைதான். நெல்லைப்பகுதி மக்கள் எங்களுக்கு நல்ல ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்தார்கள்.
நாங்கள் ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒருவரை ஒருவர் மிரட்டுவது போல காட்சி என் அண்ணனுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்பான் நாயகன் ..
அதை எடுத்த போது கூட்டம் கூடியது. ஏன் இங்கே வைத்தீர்கள் வேறு இடம் இல்லையா என்றார்கள்.. அங்கே அதே இடத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் கொலை நடந்ததாம். அதில் வேடிக்கை பார்த்த கூட்டத்தில் அந்தக் கொலை செய்துவிட்டு பெயிலில் வந்தவர்களும் இருந்தார்கள்.’ நாங்கள் பேசிய அதே வசனமாயிற்றே இது.. நல்லா தைரியமாகப் பேசு’ என்று கதாநாயகனுக்கு நடிக்க டிப்ஸ் எல்லாம் வேறு கொடுத்தார்கள்.
சென்சாரில் இருந்து படம் வெளிவர நிறைய சிரமப்பட்டீர்களாமே?
இந்தப் படத்து அனுபவங்களில் படமெடுத்தது மறக்க முடியாதது என்றால் சென்சாரில் நாங்கள் பட்டவை அதைவிட மறக்க முடியாதவை..
படத்தில் ஒரு ஆபாசம் இல்லை. தொப்புள் தெரியும் காட்சி இல்லை. ஆபாச வசனம் இல்லை. ஆனால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கேட்டால் வன்முறை என்கிறார்கள்.
இதில் அப்படி ஒன்றும் வன்முறைக் காட்சி இல்லை. பல படங்களில் வருவதைப்போல ரத்தம் சொட்ட சொட்ட வன்முறைக்காட்சி எதுவும் இல்லை.
இவர்கள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிற படங்களை ஒப்பிட்டால் இதில் ஒன்றுமே இல்லை. வன்முறை கூடாது என்று பேசுகிற படம் இது.
வன்முறை, குழுவாக கற்பழித்த கொடூரக் காட்சிகள் கொண்ட ‘பருத்திவீரன்’ படத்துக்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
நிறைய படங்கள் ஆபாசம், வன்முறை, அருவருப்பு.. கொலைசெய்து கழுத்தை அறுத்து ரத்தம் வருவதைப் பார்த்து ஆனந்தம் அடைவது போல் காட்சிகள்.. அதற்கெல்லாம் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கிறது . நாலைந்து தலைகளை துண்டாக்கிப் போடுகிற படங்களுக்குக்கூட’ ஏ’ இல்லை. இதற்கு மட்டும் பிடிவாதமாக அடம் பிடித்தார்கள்.
வந்து உட்கார்ந்ததும் ஆடு கோழி, காட்சி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால் படங்களில் ஆடு, கோழி, காட்டக் கூடாது. வந்தால் விலங்குகள் துன்புறுத்தப் படுகிறதாம். ஏனிந்த முரண்பாடு?
நம் சென்சார் போர்டில் நிறைய சிக்கல்கள், பாகுபாடுகள் முரண்பாடுகள் உள்ளன. நம் தணிக்கை துறை இந்திய அரசின் தணிக்கை துறைதான். மத்திய அரசின் தணிக்கை துறைதான். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. வெவ்வேறு பார்வை உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்ள தணிக்கைத் துறை அல்ல. கேரளாவில், ஆந்திரவில், கர்நாடகத்தில் அனுமதிப்பதை இங்கு விடுவதில்லை. இங்கே கூட ஒருவர் எடுக்கும் படத்தில் உள்ளதை விடுவார்கள். மற்றொருவர் படத்தில் வெட்டுவார்கள்.
நான் இவர்களுடன் போராடி சோர்வு அடைந்து விட்டேன். சென்சார் போர்டில் இங்கு படம் பார்ப்பவர்களுக்கு வட்டார மொழி தெரிவதில்லை. நல்ல வார்த்தைகள் எவை என்று தெரிவதில்லை.கெட்ட வார்த்தைகள் எவை என்று புரிவதில்லை.
ஒரு படைப்பாளி இவர்களிடம் படும்பாடு பெரிய போராட்டம். அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையும் தெரிய வில்லை. யதார்த்தமும் தெரிவதில்லை. படாதபாடு படுத்துகிறார்கள்.
ஒரு படத்துக்கு ‘ யூ’ சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்வது. எங்கள் படத்துக்கு ‘ ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் வாங்கிவிட்டோம்.
பொதுவாக ‘ ஏ’ சான்றிதழ் பெற்றுவிட்டால் ஆபாசப்படம் என்று மக்கள் கருத இடம் இருக்கிறது. துளியும் ஆபாசமில்லாத ஒரு படத்துக்கு இப்படி ‘ ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதை ஊடகங்களிடம் எடுத்துச் செல்கிறோம். மக்களும் அவர்களும்தான் சொல்ல வெண்டும். சென்சாரில் உள்ள தவறான அணுகுமுறையால் சிக்கி சின்னா பின்னமாகும் படங்கள் எத்தனை? படைப்பாளிகள் எத்தனை பேர்? சென்சார் போர்டில்உள்ள நிறைய சிக்கல்கள் பற்றி பலருக்கும் வெளியே சொல்லப் பயம். ஆனால் பலரும் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார்கள். நான் பட்ட கஷ்டங்கள் வேறு யாரும் படக்கூடாது என்றுதான் இதை வெளியே சொல்கிறேன். பலரும் வெளியே குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.